பிரதமர் நரேந்திர மோடியை மையமாக வைத்து முதல்முறையாக ஒரு முறைகேடு புகாரை கிளப்பியிருக்கிறது காங்கிரஸ்! அது, ரஃபேல் போர் விமான விவகாரம்தான்!
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு, அந்த அரசு மீது நேரடியாக பெரிய ஊழல் புகார்கள் இல்லை. முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை மையமாக வைத்து ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தை காங்கிரஸ் கட்சி எழுப்பியிருக்கிறது.
ரஃபேல் போர் விமானங்களை, பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்திய அரசு கொள்முதல் செய்திருக்கிறது. வழக்கமாக வெளிநாடுகளில் இருந்து இதுபோல ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்யும்போது, அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் முறையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கொள்முதல் செய்யும். இந்த நடைமுறையில் கால தாமதம் இருக்கும்.
இதை தவிர்க்க நினைத்தோ என்னவோ, 2015-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி, அந்த நாட்டு அரசுடன் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பேச்சு நடத்தி, உடன்பாட்டை எட்டினார். இப்படி பெறுவதன் மூலமாக அந்தப் போர் விமானங்களின் தயாரிப்பு தொழில் நுட்பமும் இந்தியாவுக்கு கிடைக்கும் என்றும் அப்போது பேசப்பட்டது. மோடி அரசு முன்னெடுத்த, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு அம்சமாக இது பார்க்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து மொத்தம் 36 ரஃபேல் போர் விமானங்களை, இந்திய விமானப் படைக்காக மத்திய அரசு வாங்கியிருக்கிறது. இந்த விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து நேற்று முன் தினம் (ஜனவரி 5) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தப்படி, இது தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது’ என குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடியால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருக்கிறது.’ என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி தொடர்ந்து கூறுகையில், ‘முதல் முறையாக இந்த விமானங்கள் வாங்கியதற்கு செலவான தொகை குறித்து தெரிவிக்க முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். குஜராத் தேர்தல் பிரசாரத்திலேயே, இதில் ஊழல் நடந்திருப்பதாக நான் குறிப்பிட்டேன். பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட ஒப்பந்தம் இது’ என மீண்டும் அழுத்தம் கொடுத்தார் ராகுல்.
தொடர்ந்த ராகுல், ‘மோடி தனிப்பட்ட முறையில் பாரீஸ் சென்றார். தனிப்பட்ட முறையில் அந்த ஒப்பந்தம் மாற்றப்பட்டது. மொத்த இந்தியாவுக்கும் இது தெரியும். பாதுகாப்புத் துறை அமைச்சரோ இதற்காக செல்வான தொகை குறித்து இந்தியாவுக்கும், நாட்டின் தியாகிகளுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் தெரிவிக்க முடியாது என்கிறார். இதன் ஒரே அர்த்தம், அதில் முறைகேடு நடந்திருக்கிறது என்பதுதான்!’ என்றார் ராகுல் காந்தி.
ட்விட்டரிலும் இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ‘படு ரகசியம்! ( வெளியிடுவதற்கானது அல்ல) பிரதமரும் அவரது சகாவும் ரஃபேல் விமானத்திற்கு வழங்கிய தொகை குறித்து தெரிவிக்க முடியாது என கூறியிருக்கிறார்கள். அவர்கள் இப்படிச் செய்யலாம்.. 1.இந்த விலை குறித்து நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்துவது, தேச பாதுகாப்புக்கு எதிரானது. 2. இதை கேட்பவர்களை எல்லாம், தேச விரோதிகள் என முத்திரை குத்தலாம்’ என கேலியாக ட்வீட் செய்திருக்கிறார் ராகுல்.
Top Secret
(Not for Distribution)
RM says the price negotiated for each RAFALE jet by the PM and his "reliable" buddy is a state secret.
Action Points
1.Informing Parliament about the price is a national security threat
2.Brand all who ask, Anti National#TheGreatRafaleMystery— Office of RG (@OfficeOfRG) February 6, 2018
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘தேச பாதுகாப்பில் இந்த அரசு சமரசம் செய்துகொண்டிருக்கிறது. இந்த அரசு உண்மையை கூற மறுப்பதன் மூலமாக அரசுக்கு பெரும் தொகை இழப்பு ஏற்பட்டிருப்பது தெரிகிறது. ரஃபேல் விமான கொள்முதல் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்’ என்றார் அவர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், ‘36 போர் விமானங்களில், ஒவ்வொரு விமானத்தையும் மோடி அரசு என்ன விலைக்கு வாங்கியது? பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் கொள்முதல் விலையை மறைப்பது ஏன்? ரஃபேல் போர் விமானம் ஒன்றை 80.95 மில்லியன் டாலர் (526.1 கோடி ரூபாய்) விலைக்கு பெற முந்தைய ஐ.மு.கூட்டணி அரசு பேசியிருந்த நிலையில், மோடி அரசு 241.66 மில்லியன் டாலர்(1570.8 கோடி ரூபாய்) விலைக்கு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுவது சரியா? இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு யார் பொறுப்பு?’ என கேள்வி எழுப்பியிருக்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸ் எழுப்பியிருக்கும் கேள்வி அடிப்படையில், ஒரு போர் விமானத்திற்கு 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வித்தியாசப்படுகிறது. 36 போர் விமானங்களுக்கும் சுமார் 40,000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதா? என்பதே காங்கிரஸின் கேள்வி! ஆனாலும் மத்திய அரசு நிஜமாகவே இந்த போர் விமானங்களுக்கு கொடுத்த தொகை எவ்வளவு? ஒப்பந்த அம்சங்கள் என்ன? என்பது தெரியாத வரை இது தொடர்பான தகவல்கள் ஊகங்களாகவே உலா வந்து கொண்டிருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.