காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பேற்பார் என, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு பல ஆண்டுகளாக தலைவர் பொறுப்பை வகித்து வருபவர் சோனியா காந்தி. இந்நிலையில், ராகுல் காந்தி அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்பது எப்போது என்ற கேள்வி, அக்கட்சியினரிடையே கடந்த நீண்ட காலமாக எழுந்து வருகிறது. ஆனால், அவர் கட்சியின் துணைத் தலைவராகவே நீடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த யூகங்களுக்கெல்லாம் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைத்தார். முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியின் சுயசரிதையின் அறிமுக விழா அன்றைய தினம் டெல்லியில் நடைபெற்றது. அதில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியிடம், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நிறுவனத்தில் எழுப்பப்பட்டுள்ள வர்த்தக முறைகேடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
நிகழ்ச்சி முடிந்தபின் சோனியா காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பது எப்போது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “நீங்கள் (ஊடகங்கள்) இந்த கேள்வியை பல ஆண்டுகளாக எழுப்பி வருகிறீர்கள். தற்போது அந்த நிகழ்வு நடக்கப் போகிறது”, என புன்னகையுடன் பதிலளித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்திக்கு நெருக்கமான சச்சின் பைலட் கூறுகையில், ராகுல் காந்தி காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்று தலைமை வகிக்கும் நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார். இவர் ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு பிறகு ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி தலைவராவது குறித்து கருத்து தெரிவித்த மணிசங்கர் ஐயர், “காங்கிரஸில் தாய் அல்லது மகன்தான் தலைவராக இருக்க முடியும்”, என தெரிவித்தார்.
குஜராத், ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அம்மாநிலத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக ஏற்பட்டிருக்கும் அதிருப்தியால் அங்கு ராகுல் காந்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்களிடம் நேரடியாக ராகுல் கலந்துரையாடுவதையும் அவர்கள் பெரிதும் விரும்பியுள்ளனர்.
இந்த இரண்டு மாநிலங்களிலும் வெற்றியைபெற வேண்டியது, தொடர் தோல்விகளை சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானது. சமீபத்தில் நடைபெற்ற மஹராஷ்டிரா மாநிலம் நாண்டட் - வகாலா மாநகராட்சியில் 81 தொகுதிகளில் 73 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி அடைந்தது காங்கிரஸ். பாஜக வெறும் 6 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. கனக்கிரஸின் வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது.
தொடர் தேர்தல்களை சந்திக்க ராகுல் காந்தி விரைவிலேயே தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.