மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகளுக்கு ஜிஎஸ்டி வரிவிதித்து உணர்வற்ற நிலையில் இருப்பதை மத்திய அரசு மீண்டும் நிரூபித்திருக்கிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி அறிமுக விழாவில் கடந்த 30-ம் தேதி இந்த வரிவிதிப்பு முறை அறிமுகப் படுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்ததும் பாஜக-வினர் நாடாளுமன்ற வளாகத்தின் வாயிலில் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். ஆனால், ஜிஎஸ்டி அறிமுக விழா நிகழ்ச்சியை காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
இந்த சட்டத்தின் படி, அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வரி சதவீதத்தை குறைக்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள், பிரெய்லி டைப்ரைட்டர்கள் போன்ற உபகரணங்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் மீது ஜிஎஸ்டி வரி விதித்து உணர்வற்ற நிலையில் இருப்பதை மத்திய அரசு மீண்டும் நிரூபித்திருக்கிறது என விமர்சித்துள்ள ராகுல், மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வரியை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.