”எங்கள் குடும்பத்தின் அரசியல் குரு மகாத்மா காந்தி ஒரு குஜராத்தி”: மோடிக்கு பதிலடி கொடுத்த ராகுல்

”“எனது குடும்பத்தின் அரசியல் குரு மகாத்மா காந்தி ஒரு குஜராத்தி. நாங்கள் அவரைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளோம்.”, என ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியும், நேரு-காந்தி குடும்பமும் இணைந்து குஜராத் மக்களை வெறுத்ததாகவும், அவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டதாகவும் பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டியதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தக்க பதிலடி அளித்துள்ளார்.

குஜராத் மாநிலத்துக்கு வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

அதன்படி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வடக்கு குஜராத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று (திங்கள் கிழமை) பதன் மற்றும் மேஹ்சானா ஆகிய மாவட்டங்களில் திறந்தெவெளி வாகனத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தனது குடும்பத்தின் அரசியல் குரு மகாத்மா காந்தி ஒரு குஜராத்தி என தெரிவித்தார். மேலும், பாஜக உண்மைகளை திரித்து கூறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், வாகனத்தில் இருந்தபடியே, இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அவர் அளித்த பேட்டியில், “எனது குடும்பத்தின் அரசியல் குரு மகாத்மா காந்தி ஒரு குஜராத்தி. நாங்கள் அவரைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளோம். குஜராத் இந்தியாவுக்கு பெரும் பலத்தை அளித்துள்ளது. சர்தார் வல்லபாய் படேலாக இருக்கட்டும் அல்லது காந்திஜியாக இருக்கட்டும். இதுதான் உண்மை. ஆனால், பாஜக உண்மையை திரித்துக் கூறுகிறது. இந்த பிரச்சாரத்தின்போது, வழக்கத்திற்கு மாறாக, ராகுல் காந்தி பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே சுமார் 15 நிமிடங்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

முன்னதாக, கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி குஜராத் காந்தி நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ”நேரு-காந்தி குடும்பத்தினருக்கு குஜராத் மாநிலம் எப்போதும் எரிச்சலூட்டுவதாகவே அமைந்துள்ளது. சர்தார் வல்லபாய் படேலுக்கும் அவரது மகள் மணிபென் படேலுக்கும் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதற்கு வரலாற்றில் சாட்சியம் உள்ளது.”, என கூறினார். மேலும், நேரு-காந்தி குடும்பத்தினர் குஜராத் மக்களுக்கும் அம்மாநிலத்தை சேர்ந்த மற்ற தலைவர்கள் மொரார்ஜி தேசாய் மற்றும் மாதவ்சிங் சோலங்கி ஆகியோருக்கும் அநீதி இழைத்துவிட்டதாக சாடியது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close