2019-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘மோடி குடும்பப் பெயர்’ குறித்து தெரிவித்த கருத்து குறித்து அவர் மீது தொடரப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தீர்ப்பளித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த உத்தரவை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது. எனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
இந்த தீர்ப்பு வெளியான உடனேயே, ராகுல் காந்தி ட்விட்டரில், மகாத்மா காந்தி கூறியதை மேற்கோள் காட்டி “எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. சத்தியமே என் கடவுள், அகிம்சைதான் அவரை அடைவதற்கான வழி” என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி ஏப்ரல் 13, 2019-ல் கர்நாடகாவின் கோலாரில் நடந்த மக்களவைத் தேர்தல் கூட்டத்தில் பேசியதாக பா.ஜ.க எம்.எல்.ஏ-வும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி அளித்த புகாரின் பேரில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தின்போது, “நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என அனைத்து திருடர்களின் பெயர்களிலும் மோடி என்று ஏன் இருக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே நீதிமன்ற உத்தரவுக்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தியின் அனுபவத்தால் காங்கிரஸ் துன்பமடைந்து வருகிறது என்று வியாழகிழமை கூறினார். “ராகுல் காந்தி என்ன சொன்னாலும் அது காங்கிரஸ் கட்சியையும் ஒட்டுமொத்த தேசத்தையும் எதிர்மறையாக பாதிக்கும்” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கிரண் ரிஜிஜு கூறினார்.
இந்த அவதூறு வழக்கில் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா வெள்ளிக்கிழமை இறுதி வாதங்களைக் கேட்டார்.
ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கிரிட் பன்வாலா நீதிமன்றத்தில் இறுதி வாதங்களை முன்வைத்தார். சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் மார்ச் 23-ம் தேதி ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு இன்று செய்தி அனுப்புவோம். பெரும்பாலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகலாம். இது குறித்து சனிக்கிழமை உறுதிப்படுத்தல் கிடைக்கும்” என்று பன்வாலா கூறினார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500 (அவதூறு தொடர்பானது) ஆகியவற்றின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தி கடைசியாக 2021 அக்டோபரில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“