இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்திற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அம்மாநிலத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்கிறது. மாநில அரசுக்கு எதிரான மனநிலையில் பெரும்பான்மையான மக்களின் மனநிலைமை உள்ள நிலையில், ராகுல் காந்தியின் சுற்றுப்பயணம் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, விவசாயிகள் பிரச்சனைகள், வேலையின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளால் குஜராத் மாநில மக்கள் ஏற்கனவே மாற்றத்துக்கு தயாராகி விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில், ராகுல் காந்தி மேற்கொண்ட 3 நாள் சுற்றுப்பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே விவசாயிகள் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த வாக்குறுதியை அவர்கள் லேசானதாக எடுத்து புறந்தள்ள மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
பாஜக ஆட்சியமைத்தபோது அவர்கள் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளான விவசாய நிலத்துக்கு நர்மதா தண்ணீர், 8 மணிநேர தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் குஜராத்தில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பெரும்பாலும் அவர் மாபெரும் அரசியல் கூட்டம் நடத்துவதை விரும்பாமல், மக்களுடன் கலந்துரையாடுவதை அம்மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி உள்ளிட்ட திட்டங்களை ராகுல் காந்தி கடுமையாக சாடினார். “ஒருநாள் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் தோற்றம் பிரதமருக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் அவற்றை ஒழித்துவிட்டு சிரிக்கிறார்.”, என கேலியாக விமர்சித்தார்.
அதேபோல, ஜி.எஸ்.டி. நடவடிக்கையை ”ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்த ஏன் இவ்வளவு அவசரம்? மக்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அவர்கள் எங்கள் பேச்சுக்கு காது கொடுக்கவில்லை. இந்த வரி விதிப்பால் ஏழை மக்களும், சிறு, குறு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்”, என குற்றம்சாட்டினார்.
இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம், கருப்பு பணத்தை ஒழிப்போம், ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் இருப்பு வைப்போம், விவசாயிகளுக்கு தகுந்த ஊதியம் அளிப்போம் என பாஜக அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என ராகுல் காந்தி சாடினார்.
குஜராத் அரசு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்குகிறது என குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த நிலைமை நீடிக்காது என கூறினார். மேலும், ஏழை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், சிறு வணிகர்களின் நலனுக்காக காங்கிரஸ் பாடுபடும் என ராகுல் காந்தி கூறினார்.
’இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தை முழங்கிவிட்டு, சர்தார் வல்லபாய் படேல் சிலை சீனாவில் தயாரிக்கப்படுகிறது எனவும், அச்சிலையின் மீது “மேட் இன் சீனா” என எழுதப்பட்டிருந்தால் அது அவமானகரமானது என ராகுல் காந்தி கேலியுடன் விமர்சித்தார்.
முக்கியமாக, சௌராஷ்டிராவிற்கு சென்றிருந்த ராகுல் காந்தி மக்களிடம் அவர்களது பிரச்சனைகள் குறித்து உரையாடினார். அவர்களும் அதைத்தான் எதிர்பார்க்கின்றனர். குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிராவின் பங்கு முக்கியமானது. எப்படி தேசிய அரசியலில் உத்தரபிரதேச மாநிலத்தின் பங்கு முக்கியமானதோ அதேபோல சௌராஷ்டிராவும் மாநில அரசியலுக்கு முக்கியமானது. ஏனென்றால், 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 52 எம்.எல்.ஏ.க்கள் சௌராஷ்டிரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சௌராஷ்டிராவிலிருந்து காங்கிரஸ் வெறும் 15 தொகுதிகளை மட்டுமே வென்றது. பாஜக 30 இடங்களை கைப்பற்றியது. இரண்டு இடங்களை மாநில கட்சியான குஜராத் பரிவர்த்தன் கட்சி கைப்பற்றியது. பின்பு, இந்த கட்சி ஆளும் கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.
ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதே சமயம், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டார். ஆனால், அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. மாறாக, தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கான உத்திகளை அமைத்தார். கட்சியினருடன் கூட்டம் நடத்தி வெற்றி வியூகம் அமைத்துக் கொண்டிருந்தார். அம்மாநிலத்தில் செயல்படாத பாஜக நிர்வாகிகளை நீக்கினார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், குஜராத்தில் மொத்தமாக உள்ள 26 தொகுதிகளையும் எப்படி பாஜக கைப்பற்றியதோ, அதேபோன்ற வெற்றியை சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றியை பெற வேண்டும் என அமித்ஷா கட்டளை இட்டிருக்கிறார்.
இந்த பிரச்சார பயணத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி சௌராஷ்டிராவில் குறிப்பிடத்தகுந்த பலத்தை பெற்றிருக்கிறது. ராகுல் காந்தியின் இப்பயணம் கட்சியினரை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது. இருப்பினும், குஜராத்தில் காங்கிரஸ் வெற்றிபெறுவது அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைமையின் கையிலேயே உள்ளது. காங்கிரஸ்லிருந்து சங்கர் சிங் வகேலா விலகிய பின், அக்கட்சியை வழிநடத்த திறமையான தலைமை இல்லாமல் குஜராத்தில் காங்கிரஸ் திணறுகிறது.
குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 4 மண்டல தலைவர்கள் உள்ளனர். மாநில தலைவர் பரத்சிங் சோலங்கி, மாநில முன்னாள் தலைவர்கள் அர்ஜூன் மோத்வாடியா மற்றும் சித்தார்த் படேல், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தேசிய செய்தி தொடர்பாளருமான சக்திசிங் கோஹில் ஆகியோர். ஆனால், இவர்களில் ஒருவர் கூட முந்தைய தேர்தல்களில் தங்களின் வெற்றியை நிலை நிறுத்தவில்லை. இருப்பினும், சக்திசிங் கோஹில் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுவும் அவரது சொந்த தொகுதியில் அல்ல.
குஜராத் மாநில காங்கிரஸ் வேட்பாளர் தேர்வை ஒழுங்காக மேற்கொள்ளாததாலேயே தோல்வியை தழுவியது என்ற காரணத்தை தற்போது கண்டறிந்து அதனை உணர்ந்திருக்கிறது. குறிப்பாக, கட்சியினர் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு வேட்பாளராகும் வாய்ப்பை அளித்ததாலேயே பல இடங்களில் தோற்றதாக அக்கட்சியினர் நம்புகின்றனர். அதனால், இந்த உறவினர் ஆதரவுக் கொள்கையை கைவிட்டு காங்கிரஸ் கட்சி செயல்படுமேயானால் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றியை நோக்கி அடுத்த இலக்கை அடைகிறது என சொல்லலாம்.
Inputs from Firstpost.com
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.