தீபாவளிக்கு பிறகு ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க இருப்பதாக ராகுலுக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான சச்சின் பைலட் கூறினார்.
காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தி, அந்தக் கட்சியின் தலைவராக எப்போது பொறுப்பேற்பார்? என்கிற கேள்வி நீண்ட காலமாக இருக்கிறது. தற்போதைய தலைவர் சோனியா காந்தியின் உடல் நிலை பாதிப்பும், இந்தக் கேள்வியின் வீரியத்தை அதிகப்படுத்துகிறது.
ஆனால் ராகுல் காந்தியின் செயல்பாட்டிலேயே கட்சியில் பலருக்கு முழு திருப்தி இல்லை. அவ்வப்போது திடீரென வெளிநாட்டுக்கு சென்று மாதக்கணக்கில் தங்கிக் கொள்கிறார். அவரது வியூகம், பெரிதாக எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை.
கட்சி சீனியர்கள் பலருடன் அவரது உறவு சுமூகமாக இல்லை. இது போன்ற குமுறல்கள்தான் அவரது தலைமைப் பதவியேற்பை தள்ளி வைத்தன. ராகுல் காந்தியும் அந்தப் பதவியை அடைய வேகம் காட்டவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஆனால் 2019-ல் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய சூழலில், சோனியா நாடு தழுவிய பிரசாரத்தை செய்வது சிரமம். எனவே கட்சியில் சிலர் விரும்பாவிட்டாலும்கூட, ராகுலை தலைவர் ஆக்கவேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் இருக்கிறது. இயல்பாகவே ராகுலை தவிர்த்துவிட்டு, இன்னொரு தலைவரை சிந்திக்கும் நிலையிலும் காங்கிரஸ் இல்லை.
இந்தச் சூழலில் தற்போது காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் அகில இந்தியத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சம்பிரதாயம் நடைபெறும். அப்போது ராகுல் காந்தியை தேசியத் தலைவராக புரமோஷன் செய்யும் நடைமுறை இருக்கும் என தெரிகிறது.
இது குறித்து ராகுலுக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் கூறுகையில், ‘தீபாவளி முடிந்த சில நாட்களில் ராகுல் காந்தி, கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஆகிவிடுவார் என நம்புகிறேன்’ என கூறியிருக்கிறார்.
‘வாரிசு அடிப்படையில் ராகுல் முன்னிலைப் படுத்தப்படுகிறாரா?’ என்ற கேள்விக்கு பதில் அளித்த சச்சின் பைலட், ‘ஒருவரின் செயல்பாடு மூலமாக மக்கள் மனதை எந்த அளவுக்கு அவர் கவர்கிறார் என்பதைப் பொறுத்தே உரிய இடத்தை அடைய முடியும். அரசியல் குடும்பங்களில் உள்ளவர்கள், அந்த இடத்திற்கு வரவே கூடாது என கூற முடியாது. அரசியல் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாஜக.வில் பொறுப்பில் இல்லையா?’ என கேள்வி எழுப்பினார் அவர்.
பிரியங்கா காந்தி, ‘ஆக்டிவ்’ அரசியலுக்கு வருகிறாரா? என்றும் சச்சின் பைலட்டிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘பிரியங்கா இப்போதும் காங்கிரஸில்தான் இருக்கிறார். எந்த அளவில் அவர் பணியாற்ற வேண்டும் என முடிவு செய்யவேண்டியது அவர்தான்’ என்றார் சச்சின் பைலட்.
இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் குஜராத்தில் அண்மையில் 3 நாட்கள் முகாமிட்டு ராகுல் பிரசாரம் செய்தார். அங்கு அவரின் பிரசார அணுகுமுறைகள் மாறியிருந்தன. தலைவர் பதவியை ஏற்க அவர் தயாராகிவிட்டதை உணர்த்துவதாகவே அவரது செயல்பாடுகளும் பறை சாற்றுகின்றன.