குஜராத் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக, பாஜகவும், காங்கிரஸூம் வெற்றிக்கான வியூகங்களை வகுக்க எப்போதோ ஆரம்பித்து விட்டனர்.
கடந்த செப்டம்பர் மாதத்தின் இறுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றையெல்லாம் அவர் கடுமையாக சாடினார். இந்த பயணத்தில் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்ததால், அவருக்கு குஜராத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், மீண்டும் கடந்த திங்கள் கிழமை குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டார் ராகுல் காந்தி. கெதா மற்றும் நடியாத் நகரில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி, தன் தந்தை ராஜீவ் காந்தியின் சடலத்தை பார்த்தபோது தான் மிகவும் மனவேதனை அடைந்ததாக தெரிவித்தார்.
”2014-ஆம் ஆண்டு பாஜக என்னை தாக்கி, துன்புறுத்தி தோற்கடித்ததன் மூலம் எனக்கு சாதகாமாகத்தான் செயல்பட்டுள்ளது. அதிலிருந்து நான் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறேன்”, என கூறினார்.
மேலும், “என்னுடைய குடும்பம், தாத்தா, அப்பா எல்லோரும் வெறுப்பு அழித்துவிடும் என சொல்லி தந்திருக்கின்றனர்.” என கூறினார்.
அவரது தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு அவரின் சடலத்தைப் பார்த்தபோது பெரும் வலியை உணர்ந்ததாகவும், தன் சகோதரி பிரியங்கா காந்தியும் அத்தகைய வலியை உணர்ந்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
"சிலர் எங்களை முட்டாள் என சொல்லலாம், ஆனால், வலி என்றால் என்ன என்பது எங்களுக்கு தெரியும்”, என ராகுல் காந்தி கூறினார்.