ராகுல் காந்தி மக்களவையில் நிகழ்த்திய ஆவேச உரை, கட்டித் தழுவல் அனைத்தும் ஓ.கே! கடைசியாக அந்தக் கண்ணடிப்பு எதற்கு? அது அவசியமா?
ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது இதுவரையிலான விமர்சனமாக இருந்தது. ஆனால் இன்று (ஜூலை 20) நரேந்திர மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் ராகுல் காந்தியின் உரை வீச்சு, அதிர்வுகளை கிளப்பியிருக்கிறது.
ராகுல் காந்தி தனது பேச்சில், ‘வங்கிக் கணக்கில் மக்களுக்கு போடுவதாக சொன்ன 15 லட்சம் ரூபாயை ஏன் போடவில்லை? ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் கூடுதல் விலை முடிவு செய்தது ஏன்?’ என கேள்விகளை ஆவேசமாக முன் வைத்தார்.
ராகுல் காந்தியின் பேச்சில் வழக்கத்தைவிட ஆவேசமும், உத்வேகமும் அதிகமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது. ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடி சிரித்துக் கொண்டிருந்தார்.
இதைக் குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி சிரித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது சிரிப்பில் பதற்றம் தெரிகிறது. நரேந்திர மோடியிடம் உண்மை இல்லை. அதனால்தான் அவரால் நான் பேசுகையில் எனது கண்களை பார்க்க முடியவில்லை’ என பிரதமரை நேரடியாக குற்றம் சாட்டினார்.
‘என்னை பப்பு என கிண்டல் செய்யுங்கள். ஆனாலும் நான் உங்களை வெறுக்க மாட்டேன்’ என செண்டிமெண்டாகவும் பேசினார் ராகுல்!
ராகுல் காந்தி தனது பேச்சை முடித்துக்கொண்டு, நேராக நரேந்திர மோடியை நோக்கிச் சென்றார். அப்போது மொத்த எம்.பி.க்களும் நடக்கவிருப்பதை புரியாமல் திகைத்திருந்தனர். யாரும் எதிர்பாராத வகையில் மோடியிடம் சென்று கை கொடுத்தார்.
ராகுல் காந்தி கிளம்ப முயற்சிக்க, நரேந்திர மோடி மீண்டும் அவரை கை நீட்டி அழைத்தார். உடனே சட்டென மோடியை கட்டித் தழுவினார் ராகுல். நாடாளுமன்ற வரலாற்றில் நடைபெறாத நிகழ்வு இது! இது ஏற்கத்தக்க நிகழ்வு அல்ல என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் குறிப்பிட்டார்.
எனினும் ராகுல் காந்தியின் கட்டியணைப்பு காட்சிகள் உலகம் முழுக்க வைரல் ஆகின. ராகுல் காந்தியின் பெருந்தன்மையான அணுகுமுறை இது என்றும், நரேந்திர மோடியை தனது ஆளுமையால் ராகுல் விஞ்சிவிட்டார் என்றும் காங்கிரஸார் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆனால் இதன் பிறகு நடந்ததுதான் ஆன்டி க்ளைமாக்ஸ்! தனது இருக்கையில் போய் அமர்ந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.பி.யும் தனது தோழருமான ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை பார்த்து பிரகாஷ் வாரியர் பாணியில் கண்ணடித்தார்.
‘பார்த்தாயா, எப்படி கட்டியணைத்து கலக்கிவிட்டேன் என?’ என கேட்பது போல இருந்தது அந்த கண்ணடிப்பு காட்சி! ஆக, அதுவரை ராகுல் காந்தி உணர்ச்சிகரமாக பேசியது, மோடியை கட்டியணைத்தது ஆகியன அனைத்தும் ராகுலும், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் முன்கூட்டியே பேசி முடிவு செய்தபடி நடந்ததா? என்கிற கேள்வியும் எழுந்தது.
நாடாளுமன்றத்தில் அதுவரை ராகுல் காந்தி கலக்கியதாக கருதப்பட்ட சூழலில், கடைசி நிகழ்வு காமெடியாக மாறிவிட்டதை குறிப்பிட்டே ஆகவேண்டியிருக்கிறது. எனினும் எதிர்க்கட்சிகள் தரப்பில் வேறு யார் பேச்சையும் விட ராகுல் காந்தி பேச்சு பெரும் தாக்கத்தை உருவாக்கியதையும் மறைத்துவிட முடியாது!
நரேந்திர மோடிக்கு சரியான போட்டியாக ராகுல் உருவாகிவிட்டதை இந்த நாடாளுமன்ற நிகழ்வு உணர்த்தவே செய்தது. மோடியின் பதிலுரை வந்த பிறகுதான் ராகுல்-மோடி இடையிலான போட்டியின் முழு பரிமாணம் தெரியும்.