குஜராத் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் கார் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அசாம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
ராஜஸ்தானில் பெய்த கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்மாநிலத்தின் ஜல்லோர், பாலி, சிரோஹி ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகளவில் உள்ளன. சமூக அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மாநிலம் முழுவதும் பல மீட்பு முகாம்கள் அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நீர் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தானில் வெள்ளம் பாதித்த ஜல்லோர் உள்ளிட்ட பகுதிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார். அவருடன், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான அசோக் கெலாட் ஆகியோரும் உடன் சென்றனர்.
சாலை வழியாக சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட ராகுலிடம், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது குறைகளை எடுத்துக் கூறினர். அதனைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட அம்மாநிலத்துக்கு ராகுல் சென்றார்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் பனஸ்கந்தா நகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு, தான் பயணிக்கவிருக்கும் ஹெலிகாப்டர் நின்றிருந்த பகுதிக்கு ராகுல்காந்தி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும், காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்ததால் ராகுலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், ராகுலின் பாதுகாப்புக்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. ராகுல் சென்ற கார் மீது கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/Rahul-car.jpg)
ராகுலின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை பனஸ்கந்தா நகர காவல்துறை கண்காணிப்பாளர் நீரஜ் பத்குஜார் உறுதி படுத்தியுள்ளார்.
ராகுல் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் பாஜக-வினர் உள்ளனர் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், ராகுல் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது என கூறியுள்ள பாஜக, காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 6 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். ஆனால், ஒருவர் கூட வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை இதுவரை பார்வையிடவில்லை. ஏனெனில், மாநிலங்களவை காலியாக உள்ள குஜராத் மாநில உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு வருகிற 8-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி, அவர்கள் அனைவரும் விலை போகாமல் இருக்கும் பொருட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கட்சி மேலிட உத்தரவின் பேரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.