இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், ராகுல் காந்தி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்திக்கு ஆதரவாக 89 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வரும் டிசம்பர் 16-ஆம் தேதி ராகுல் காந்தி பொறுப்பேற்க உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 1998-ம் ஆண்டு சோனியா காந்தி பதவி ஏற்றார். காங்கிரஸ் தலைவர் பதவியில் மிக நீண்டகாலம், அதாவது 19 ஆண்டுகள் இருந்தவர் என்ற பெருமையை சோனியா பெற்றுள்ளார். சோனியா காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அவரின் தலைமையில் 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.
இந்த நிலையில் சோனியா காந்திக்கு அண்மைக்காலமாக அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. ஓரிருமுறை வெளிநாட்டுக்குச் சென்று, சோனியா சிகிச்சை பெற்றார். இதற்கிடையே உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலின்போது, பிரசாரத்திற்கு இடையே சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பிரசாரத்தை ரத்துசெய்து விட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் புதுடெல்லி திரும்பி ஓய்வெடுத்து வந்தார்.
இதனால் அரசியல் கூட்டங்கள், கட்சி விவகாரங்களில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். இதற்கிடையே, கட்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில் ராகுல் காந்தியைத் தலைவராக்க மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தி வந்தனர்.
எனினும், ராகுல் தலைமைப் பதவிக்கு வருவதற்கு எதிராக, கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்திருந்தார். வேறுசில மூத்த தலைவர்களும் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கருதப்பட்டது.
ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவருமே ராகுலின் தலைமைக்கு ஒப்புதல் அளித்துள்ளதால், அவர் எந்தவித சிக்கலுமின்றி தற்போது போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார்.
இதனால், ராகுல் காந்தியின் தலைமையிலேயே காங்கிரஸ் கட்சி, 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. அதற்கு முன் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களும் நடைபெறவுள்ளதால், ராகுல் காந்திக்கு கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை ராகுலும் அறிந்திராமல் இல்லை. அதை நோக்கியே அவரும் காய்களை நகர்த்தி வருகிறார். ராகுலின் தலைமையில் காங்கிரஸின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்க உள்ள ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.