Advertisment

அரசியல் அமைப்பைக் காப்பாற்ற மோடியைக் கொல்ல தயாராக இருங்கள்; காங்கிரஸ் நிர்வாகி கைது

அரசியல் சாசனத்தையும் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் எதிர்காலத்தையும் காப்பாற்ற மோடியைக் கொல்ல தயாராக இருங்கள்; மத்திய பிரதேச காங்கிரஸ் நிர்வாகி ராஜா படேரியா கைது; பா.ஜ.க எதிர்ப்பு

author-image
WebDesk
New Update
அரசியல் அமைப்பைக் காப்பாற்ற மோடியைக் கொல்ல தயாராக இருங்கள்; காங்கிரஸ் நிர்வாகி கைது

மத்தியப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா படேரியா, பன்னா மாவட்டத்தின் பாவாய் தாலுகாவில் கட்சித் தொண்டர்களிடம் பேசும் போது, ​​அரசியல் சாசனத்தையும் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் எதிர்காலத்தையும் காப்பாற்ற மோடியைக் கொல்லுங்கள் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

செவ்வாய்க்கிழமை காலை, காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பன்னாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து ராஜா படேரியாவை போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க வசைபாடி வரும் நிலையில், தன்னுடயை பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ராஜா படேரியா கூறினார். அவருக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய- சீனா ராணுவம் இடையே மோதல்; இரு தரப்பிலும் சிறு காயங்கள்

ஞாயிற்றுக்கிழமை தொண்டர்களிடம் பேசிய ராஜா படேரியா ஒரு வீடியோவில், “அரசாங்கம் அல்லது நிர்வாகத்தின் எந்த அழுத்தமும் எதிர்க்கப்பட வேண்டும். இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்ததிலிருந்து அவரை (மாவட்ட காங்கிரஸ் தலைவர்) எனக்கு தெரியும். அவர் உங்கள் உத்தரவாதத்தை எடுத்துக் கொண்டால், அவர் பின்வாங்க மாட்டார். மோடி தேர்தல்களை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார் என்று நேற்று சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். மதம், ஜாதி, மொழி என்று பிரித்து விடுவார். சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் வனவாசிகள் (பழங்குடியினர்) உயிர்கள் ஆபத்தில் உள்ளன. அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் மோடியை கொல்ல நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ஹத்யா (கொலை) என்பதற்கு அர்த்தம் அவரை தோற்கடிக்கும் வேலை” என்று பேசியுள்ளார்.

அவரது பேச்சு வைரலானதை அடுத்து, பா.ஜ.க தலைவர்கள் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களை கடுமையாக தாக்கினர். முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “பாரத் ஜோடோ யாத்ரா நாடகம் செய்பவர்களின் யதார்த்தம் வெளிவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயத்தில் வசிக்கிறார், அவர் முழு நாட்டினதும் மரியாதை மற்றும் நம்பிக்கையின் மையமாக உள்ளார். களத்தில் காங்கிரஸால் அவருடன் போட்டியிட முடியாத நிலையில், காங்கிரஸ் தலைவர் மோடியைக் கொன்றுவிடுவதாகப் பேசுகிறார்,” என்று கூறினார்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். ராஜா படேரியா மீது பாவாய் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய, மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் துணைத் தலைவராக இருக்கும் ராஜா படேரியா, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ராம் மனோகர் லோஹியா தான் தனது நம்பிக்கைகள் என்று தெளிவுபடுத்தினார். “எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. நான் பிரதமரைக் கொல்ல வேண்டும் என்று எண்ணவில்லை, தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தேன். மகாத்மா காந்தியின் சித்தாந்தத்திற்குப் பதிலாக (நாதுராம்) கோட்சேவின் சித்தாந்தத்திற்கு ஆதரவான அரசாங்கத்தை தோற்கடிப்பதே இது” என்று ராஜா படேரியா கூறினார்.

யார் இந்த ராஜா படேரியா?

தாமோ மாவட்டத்தில் உள்ள ஹட்டா தாலுகாவை சேர்ந்தவர் ராஜா படேரியா. 1971 ஆம் ஆண்டு ஜபல்பூரில் அறிவியல் கல்லூரியில் படிக்கும் போது காங்கிரஸில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 1992 இல் ஹட்டாவிலிருந்து சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது இரண்டாவது முறையாக ஹட்டாவிலிருந்து 1998 இல் வெற்றி பெற்று திக்விஜய சிங் தலைமையிலான அரசாங்கத்தில் இடம் பெற்றார். 1998 முதல் 2003 வரை தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான மாநில அமைச்சராகப் பணியாற்றினார்.

இந்த காலகட்டத்தில், அவர் பன்னா மாவட்டத்தின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஹட்டா தொகுதி பட்டியல் சாதியினருக்கு (எஸ்.சி) ஒதுக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்ட பிறகு, ராஜா படேரியா தனது எல்லையை பன்னாவில் விரிவுபடுத்தத் தொடங்கினார், மேலும் 2009 இல் கஜுராஹோவிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால் அவர் பா.ஜ.க.,வின் ஜிதேந்திர சிங்கிடம் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ராஜா படேரியா பின்னர் தனது நிலையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினார் மற்றும் ஆதிவாசிகள் மற்றும் SCக்களின் உரிமைகளுக்காக போராடும் ஆதிவாசி, வனவாசி தலித் மஹாசங் என்ற அமைப்பை உருவாக்கினார். ஆனால் 2014 மக்களவைத் தேர்தலில் கஜுராஹோவில் இருந்து காங்கிரஸ் தலைவர் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் இது எந்த பலனையும் கொடுக்கவில்லை.

ராஜா படேரியா பெரும்பாலும் சமாஜ்வாடி சித்தாந்தத்துடன் கூடிய தலைவராக குறிப்பிடப்படுகிறார் மற்றும் மாநில காங்கிரஸில் திக்விஜய சிங் முகாமின் ஒரு பகுதியாக இருப்பதாக நம்பப்படுகிறது. அவர் தனது கருத்தை நிரூபிக்கும் போது சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடுவது இது முதல் முறை அல்ல. ஆதாரங்களின்படி, சமீபத்தில் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இதற்கு மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.,வுக்கு மாற முடியுமா என்று கேட்டதற்கு, ராஜா படேரியா, “இந்த வயதில், ஒருவர் தனது மனைவியை நம்ப முடியாது, அவர்கள் இன்னும் எம்.எல்.ஏ.க்கள்தான்” என்று கூறியதாக கூறப்படுகிறது.

ராஜா படேரியாவின் பேச்சு குறித்து கேட்டபோது, ​​மூத்த காங்கிரஸ் தலைவர் சுரேஷ் பச்சோரி, “அவரது பேச்சை நான் பார்க்கவில்லை, ஆனால் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் அவர் உண்மையில் கூறியிருந்தால், அது கண்டிக்கத்தக்கது” என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர், “காந்தி மற்றும் அகிம்சை கொள்கைகளை பின்பற்றும் கட்சி காங்கிரஸ். ராஜா படேரியாவின் பேச்சு கட்சியின் சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கவில்லை, இதைக் கருத்தில் கொண்டு, மூத்த தலைவர்கள் அவருக்குக் விளக்கம் நோட்டீஸ் அனுப்பியிருக்கலாம். நாங்கள் பா.ஜ.க.,வைப் போல் இல்லை,” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment