சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான கொலை வழக்கில் தனது வாக்குமூலத்தை திரும்பப் பெற்ற சாட்சி, மீண்டும் புதிய வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு சிபிஐ-யிடம் கோரியுள்ளார்.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பெண் பக்தர்கள் இருவரை பாலியல் பலத்காரம் செய்ததாக குர்மீத் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான இந்த வழக்குகள் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சாமியார் மீதான இரு பாலியல் பலாத்கார வழக்கில், வழக்கு ஒன்றுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ரோஹ்தக் சோனாரியா சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அப்போது நடைபெற்ற கலவரத்தில் சிக்கி சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சாமியார் குர்மீத் மீது பாலியல் வழக்கு மட்டுமல்லாமல் இரண்டு கொலை வழக்குகளும் உள்ளன. பூரா சச் என்ற பத்திரிகையின் உரிமையாளர் சத்திரபதி கடந்த 2002-ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். குர்மீத் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த உண்மையை தொடர்ந்து வெளியிட்டு வந்ததால் இவர் கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. அதேபோல், தேரா சச்சா சவுதா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்ஜித் சிங்கும் கடந்த 2002-ஆம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்குகள் மீதும் ராம் ரஹீம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரு வழக்குகள் தொடர்பான விசாரணையின் இறுதி வாதம் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, வீடியோ கான்பரன்சிங் மூலம் சாமியார் ஆஜரானார். முன்னதாக, அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகளின் முக்கிய சாட்சியான சாமியார் குர்மீத்தின் முன்னாள் ஓட்டுனர் கட்டா சிங், குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு எதிராக புதிய வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு சிபிஐ-யிடம் கோரியுள்ளார். இவர் தனது வாக்குமூலத்தை ஏற்கனவே திரும்பப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மீதான விசாரணை வருகிற 22-ம் தேதி நடைபெறும் என சிபிஐ தெரிவித்துள்ளது.