அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்விகேட்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை : ராம்நாத் கோயங்கா சொற்பொழிவில் பிரணாப் முகர்ஜி பேச்சு

பத்திரிக்கைச் சுதந்திரம் இல்லாமல் ஜனநாயகம் செயல்படுமேயானால் அது வெற்று காகிதத்திற்கு ஓப்பானது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர் “ராம்நாத் கோயங்கா சொற்பொழிவு” நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்கா மறைவின் 25-வது ஆண்டு நினைவாக, ராம்நாத் கோயங்கா சொற்பொழிவு என்ற பெயரில் கடந்த ஆண்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

இதேபோல இந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது நிகழ்வில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் விவேக் கோயங்கா நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

இதையடுத்து சிறப்புரையாற்றிய குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி பேசியதாவது: இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ராம்நாத் கோயங்கா குறித்து பேசுவது உண்மையிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது. எக்ஸ்பிரஸ் என நினைக்கும் போது ராம்நாத் கோயங்கா தான் நினைவுக்கு வருவார்.

இந்தியாவில் அவசர காலம் பிரகடணப்படுத்தப்பட்டபோது, ராம்நாத் கோயங்காவின் தலைமையின் கீழ் செயல்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாழிதழின் தலையங்கம் வெற்றுப் பகுதியாக வெளியிடப்பட்டது. அந்த செயல்பாடு அப்போதைய நிலையில் மிக வலிமை வாய்ந்ததாக இருந்தது. அந்த வெற்று தலையங்கத்தில் வேறு ஏதும் இருந்தால் கூட அவ்வளவு வலிமை அதற்கு இருந்திருக்காது.

பத்திரிக்கைச் சுதந்திரம் இல்லாமல் ஜனநாயகம் செயல்படுமேயானால் அது வெற்று காகிதத்திற்கு ஓப்பானது. ஜனநாயகம் மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தை வளர்க்க ராம்நாத் கோயங்கா விரும்பினார். அதனை அனைத்து பத்திரிக்கையாளர்களும் தற்போது பின்பற்றுகின்றனர்.

தற்போது விவேக் கோயங்கா தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனமானது தொடர்ந்து நேர்மையாக உண்மைத் தன்மையை வெளியிட்டு வருகிறது. ராம்நாத் கோயங்கா இருந்தபோது இருந்த அதே மதிப்பு தற்போதும் இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு உள்ளது என்று கூறினார்.

மேலும், விவாதமும், கருத்துவேறுபாடும் இருந்தால் தான் துடிப்பான ஜனநாயகத்தை உருவாக்க முடியும். அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்பதென்பது ஆரோக்கியமான விஷயம் என்பதோடு அவை ஜனநாயகத்தின் அடிப்படை தேவையுமாகும். ஊடகமானது தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு மக்களுக்கும், தலைவர்களுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும். அதன் மூலம் ஊடகமானது மக்களிடேயே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசின் செயல்பாடு மற்றும் செயல்பாடின்மை ஆகியவற்றை சுட்டிக்காட்டி அரசின் அது தொடர்பான தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

×Close
×Close