நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியான பாஜக சார்பில் பிகார் மாநில முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் களத்தில் இறக்கப்பட்டனர்.
இந்தத் தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர் என மொத்தம் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,120 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஒரு எம்.பி.-யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டின் மதிப்பு, அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். அதன்படி மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 ஆகும்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குபதிவு, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் கடந்த 17-ம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதற்காக, நாடாளுமன்றத்தில் ஒரு வாக்குச்சாவடி, அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் தலா ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 32 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அன்றைய தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் சுமார் 99 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும், மாநில தலைநகரங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் அனைத்தும் உடனடியாக சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன. அதன் அதிகாரப்பூர்வமாக முடிவுகள் மாலை 4.30 மணியளவில் அறிவிக்கப்பட்டன. அதில், ராம்நாத் கோவிந்துக்கு 7,02,044 வாக்குகளும், மீராகுமாருக்கு 3,67,314 வாக்குகளும் பதிவாகியதாக அறிவிக்கப்பட்டது. மேலும், பதிவான வாக்குகளில் 21 வாக்குகள் செல்லாதவை என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வாகியுள்ளார். புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.