நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுள்ளார். புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்துக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிந்ததையொட்டி, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் பிகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் களமிறங்கினர். நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 20-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் ஜூலை 25-ம் தேதி (இன்று) பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் ராஜபாதையில் கடந்த சில தினங்களாக நடைபெற்றன.
இந்நிலையில், குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் தனது மனைவியுடன் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து, குதிரைகள், பாதுகாப்புப் படையினர் சூழ நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற விழாவில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கெஹர், ராம்நாத் கோவிந்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தாம் மிக எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் என குறிப்பிட்டார். மேலும், டாக்டர்.ராதாகிருஷ்ணன், அப்துல்கலாம், பிரணாப் முகர்ஜி ஆகியோர் வழியில் செல்வது பெருமையளிக்கும் விஷயம். வேற்றுமைகள் பல இருந்தாலும் ஒற்றுமையுடன் செயல்படுவதே நமது பலம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.