மாநிலங்களவை நியமன உறுப்பினராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவியேற்றுக் கொண்டார். இதற்கு அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநிலங்களவைக்கு வருகை தந்திருந்த ரஞ்சன் கோகோய், பதவியேற்பதற்காக அவையின் முன் பகுதிக்கு வந்தார். அப்போது எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். அமளிக்கு இடையே, மாநிலங்களவை நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகோய் பதவியேற்றுக் கொண்டார்.
வெங்கையா நாயுடு கண்டனம் : எதிர்க்கட்சியினரின் கோஷங்களுக்கு கண்டனம் தெரிவித்த அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இது அவை உறுப்பினர்களின் மாண்புக்கு பொருந்தாத செயல் என்று கண்டித்தார்.
எம்.பி,க்கள் எதிர்ப்பு : ரஞ்சன் கோகோயின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், அவையை விட்டு வெளியேறினர்.
மூத்த நீதிபதிகள் அதிருப்தி : ரஞ்சன் கோகோயின் நியமனத்திற்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான மதன் பி லோகுர், ஏ கே பட்நாயக், குரியன் ஜோசப், செலமேஸ்வர் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தின் மூலம், பாமர மக்களுக்கு நீதித்துறை மீ்து உள்ள நம்பிக்கை சிதைவடைந்துள்ளது என்றும், நீதித்துறையின் சுதந்திரத்தன்மை தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் முன்னாள் நீதிபதி லோகுர் கூறியதாவது, கோகோயின் நியமனம் தங்களுக்கு எந்தவித அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. ஆனால், இந்த நியமனம் இவ்வளவு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.
நீதிபதி பட்நாயக் கூறியதாவது, முன்னாள் நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவியையோ அல்லது மாநிலங்களவை தேர்தலிலோ போட்டியிடக்கூடாது என்பது எனது கருத்து.இந்த நியமன அறிவிப்பு, நீதித்துறையில் உள்ள சுதந்திரத்தன்மை மீதான சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.
நீதிபதி செல்லமேஸ்வர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் ஆடம்சை குறிப்பிட்டு தற்கொலை செய்யாத ஜனநாயகம் ஒருபோதும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சன் கோகோய் கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். 4 மாதங்களிலேயே இவர் இந்த நியமன பதவியை பெற்றுள்ளார். இவருக்கு எதிராக போடப்பட்ட பாலியல் துன்புறுத்த வழக்கும் நிராகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அசாம் குடிமக்கள் தேசிய பதிவேடு, அயோத்தி தீர்ப்பு உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் இவர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil