பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பெண் பக்தர்கள் இருவரை பாலியல் பலத்காரம் செய்ததாக குர்மீத் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான இந்த வழக்குகள் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு கடந்த 25-ம் தேதி வழங்கப்பட்டது. அதில், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், தண்டனை குறித்த விவரம் ஆகஸ்ட் 28-ம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. குர்மீத் ராம் ரஹீம் சிங் அடைக்கப்பட்டுள்ள, ரோஹ்தக் சோனாரியா சிறைக்கு சென்ற நீதிபதி, இந்த தீர்ப்பை வழங்கினார். அதற்கு முன்னர், இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு வாதிட்டார். ஆனால், ராம் ரஹீம் சிங் ஒரு சமூக ஆர்வலர் என வாதிட்ட அவர் தரப்பு வழக்கறிஞர், கனிவான நோக்குடன் இதனை அணுக வேண்டும் என நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விவரங்களின் படி, சாமியார் மீதான இரு பாலியல் பலாத்கார வழக்கில், வழக்கு ஒன்றுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் 20 ஆண்டுகளும், தலா ரூ.15 லட்சம் அபராதம் வீதம் இரு வழக்குகளுக்கும் சேர்த்து ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அவர் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும். அதுதவிர, பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராம் ரஹீம் சிங் குற்றவாளி என கடந்த 25-ம் தேதியன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும், ஹரியானா - பஞ்சாப் மாநிலங்களில் கலவரம் வெடித்தது. இதில் சிக்கி சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.