பாலியல் புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: குற்றவாளிகளை தானே கண்டுபிடித்த துணிச்சல் பெண்

போலீசார் புகாரை ஏற்க மறுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால், தன்னை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரையும் அப்பெண்ணே கண்டுபிடித்துள்ளார்.

By: November 4, 2017, 1:06:08 PM

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டும் மீண்டும் காவல் துறையும், பொது சமுதாயமும் கேலிக்கும், அவமானத்திற்கும் உட்படுத்தி அவளை மேலும் துன்பத்திற்கு ஆட்படுத்தும் சம்பவங்கள் தினந்தோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதற்கு சமீபத்திய உதாரணமாக, மத்திய பிரதேச மாநிலத்தில் பாலத்திற்கு அடியில் 4 பேரால் தொடர்ந்து 3 மணிநேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் புகாரை, “இந்த சம்பவம் திரைப்படங்களில் வருவதுபோல் உள்ளது”, எனக்கூறி போலீசார் புகாரை ஏற்க மறுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால், தன்னை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரையும் அப்பெண்ணே கண்டுபிடித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, பாலத்திற்கு அடியில் அவரை நான்கு பேர் வலுக்கட்டாயமாக கயிற்றால் கட்டி சுமார் 3 மணிநேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, அப்பெண்ணின் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால், ஏற்கனவே வலியில் இருந்த அப்பெண், தன் பெற்றோர் துணையுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். ஆனால், அங்கு போலீசார் “நீ கூறுவது திரைப்படங்களில் வருவதுபோல் உள்ளது”, எனக்கூறி புகாரை ஏற்க மறுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அச்சம்பவம் நடைபெற்ற தினம், மத்தியபிரதேச மாநிலம் உருவான தினம் என அம்மாநிலம் முழுவதும் கோலாகலமான கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதனால், இந்த கொண்டாட்டங்களுக்கிடையே இச்சம்பவம் வெளியில் தெரியக்கூடாது என போலீசார் மறைத்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு, 3 காவல் நிலையங்களில் அப்பெண்ணின் புகாரை ஏற்க மறுத்தனர். அப்பெண்ணின் பெற்றோரும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, அப்பெண் தன் பெற்றோருடன் சென்றுகொண்டிருக்கையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை சாலையில் அடையாளம் கண்டிருக்கிறார். அவர்களை, அப்பெண்ணும், குடும்பத்தாரும் துரத்திப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த இருவர் மூலம், குற்றம்சாட்டப்பட்ட மற்ற 2 பேரும் பிடிபட்டனர். பிடிபட்டவர்கள் கோலு பீஹாரி, அமர் சாண்டு, ராஜேஷ், ரமேஷ் ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே, குற்றவாளிகள் மட்டுமல்லாமல், புகாரை ஏற்க மறுத்த காவல் துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் நல ஆணையம், மத்தியபிரதேச காவல் துறை டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், இந்த வழக்கை மகளிர் விரைவு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் உத்தரவிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Raped by 4 men for 3 hours this girl caught her own rapists after police called her story filmy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X