கல்லூரிகளுக்கு இலவச வை-பை சேவை வழங்கும் திட்டத்துக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அனுமதியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கோரியுள்ளது.
இதுகுறித்து வெளியான அரசு வட்டாரத் தகவல்களின் படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த மாதத்தில் கல்லூரிகளுக்கு இலவச வை-பை சேவை வழங்கும் திட்டத்தை முன் மொழிந்துள்ளது.
அதில், நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 38,000 கல்லூரிகளில் இலவச வை-பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் விளக்கக் காட்சியையும் அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. முதல் முறையாக தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று இது போன்ற திட்டத்துடன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை அணுகுவது இதுவே முதல் முறையாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாணவர்கள் சுமார் 3 கோடி பேர் பயனடைவார்கள் என தெரிகிறது.
மேலும், இத்திட்டம் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அத்தகவல்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம், இது போன்ற விஷயங்களில் வெளிப்படையான ஒப்பந்தம் கோரப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்திற்கு அந்நிறுவனம் பணம் வசூலிக்கவில்லை என்றாலும் கூட உடனடியாக ஒப்புதல் வழங்கி விட முடியாது. மற்ற தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் நியாயமான வாய்ப்பளிக்க வேண்டும். வெளிப்படையான ஒப்பந்தம் கோரப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினர் கருத்து கூற மறுத்து விட்டனர்.
அதேசமயம், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த, மத்திய பல்கலைக்கழகங்களுக்கு இலவச வை-பை வழங்கும் மத்திய மனிதவள அமைச்சகத்தின் திட்டம், தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதிக்குள் 38 பல்கலைக்கழகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அண்மையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.