குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: சுஷ்மா வருத்தம்

குல்பூஷன் ஜாதவின் தாயாருக்கு விசா வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் சர்தாஜ் அஜீஸ் ஒப்புக்குக் கூட பதிலளிக்கவில்லை என சுஷ்மா சுவராஜ் வருத்தம்.

குல்பூஷன் ஜாதவின் தாயாருக்கு விசா வழங்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், ஒப்புக்குக் கூட அவர் பதிலளிக்கவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறப்பட்டு பிடிபட்ட குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவச் சட்டப் பிரிவு 59-ன் கீழும், அதிகாரபூர்வ ரகசியச் சட்டம் 1923-ன் கீழும் குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, ஜாதவ் தூக்கிலிடப்பட்டால் இருநாட்டு தூதரக உறவுகள் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. அந்நாட்டு தூதரை அழைத்து சம்மன் அளித்ததுடன், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், தூதரக உதவியையும் இந்தியா நாடியது. ஆனால், பாகிஸ்தான் எதற்கும் பணியவில்லை. தூதரக உதவியையும் புறக்கணித்தது.

இதையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்று விசாரணை நடத்திய சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில்,”குல்பூஷன் ஜாதவின் தாயாருக்கு விசா வழங்க கோரி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினேன். அதன் மூலம், குல்பூஷன் ஜாதவை அவரது தாயார் பாகிஸ்தான் சிறைக்கு சென்று சந்திக்க முடியும். ஆனால், மரியாதை நிமித்தமாக ஒப்புக்குக் கூட அவர் பதிலளிக்கவில்லை” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வேண்டும் என சர்தாஜ் அஜீஸ் பரிந்துரை செய்தால் உடனடியாக வழங்கப்படும் எனவும் சுஷ்மா உறுதியளித்துள்ளார்.

“மருத்துவ சிகிச்சைகளுக்கு விசா கோரும் பாகிஸ்தானியர்கள் மீது எனக்கு அனுதாபம் உண்டு. அதேபோல், சர்தாஜ் அஜீஸும் தனது நாட்டு மக்களை கருத்தில் கொண்டிருப்பார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மருத்துவ சிகிச்சைகளுக்கு விசா கோரும் பாகிஸ்தானியர்களுக்கு அவருடைய பரிந்துரை அவசியம். தனது சொந்த நாட்டு மக்களுக்கு பரிந்துரை வழங்க அவர் ஏன் தயக்கம் காட்டுகிறார் என எனக்கு தெரியவில்லை” என்றும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு மருத்துவ விசா அளிக்க இந்திய தூதரக அதிகாரிகள் மறுத்ததாக தெரிகிறது. அதனையடுத்து, தான் இந்தியாவிற்கு வர அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டுவிட்டரில் அந்த இளம் பெண் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close