கோரக்பூரில் ரூ.82 கோடியில் ஆராய்ச்சி மையம்: மத்திய அரசு

மத்திய அரசு முடிந்தவரையில் மாநில அரசுக்கு உதவி செய்து வருகிறது. உயிரிழப்பு காரணமாக பிரதமர் மோடி கவலை கொண்டு உள்ளார்

உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இதுவரை 72 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனைக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) சிலிண்டர் விநியோகித்து வந்த தனியார் நிறுவனம் தனது நிலுவைத் தொகைக்காக ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் அடுத்தடுத்து பலியானதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆளும் பாஜக பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.

மருத்துவமனைக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) விநியோகம் செய்த நிறுவனம் விடுத்த எச்சரிக்கைகளை அரசு அலட்சியம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் இவ்வளவு உயிர்பலி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்துள்ள பேட்டியில், “விசாரணை அறிக்கை வந்ததும் இவ்விவகாரம் தொடர்பாக முழுமையாக ஆலோசனை மேற்கொள்வேன். கோரக்பூரில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளேன். பரவும் நோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இதற்கு ஜேபி நட்டா உறுதி அளித்து உள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை கோரக்பூருக்கு கொண்டுவர பிரதமர் மோடி அனுமதி வழங்கி உள்ளார். குற்றவாளிகள் தப்ப முடியாது” என்றும் தெரிவித்தார்.

மத்திய மந்திரி ஜே.பி. நட்டா பேசுகையில், மத்திய அரசு முடிந்தவரையில் மாநில அரசுக்கு உதவி செய்து வருகிறது. உயிரிழப்பு காரணமாக பிரதமர் மோடி கவலை கொண்டு உள்ளார், தொடர்ந்து நிலவரத்தை கேட்டு வருகிறார். கோரக்பூருக்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கையை எடுக்கிறது. சிறப்பான மருத்துவ சேவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய மூன்று நபர்கள் கொண்ட குழுவானது இங்கு வந்து உள்ளது. என்சிபாலிட்டிஸ் குறித்து யோகி ஆதித்யநாத் பாராளுமன்றத்திலும் பேசிஉள்ளார். அவருடைய அறிவுரையின் பெயரில் குழந்தைகளுக்கான நோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய கோரக்பூரில் ரூ. 82 கோடி செலவில் பிராந்திய ஆய்வு மையம் அமைக்கப்படும்” என்றார்.

×Close
×Close