ஆந்திராவை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கிலோ கணக்கில் தங்கம், வைரம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.500 கோடி இருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஆந்திராவில் நகர திட்டமிடல் துறை இயக்குநர் கோலா வெங்கட ரகுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். திங்கள் கிழமை தொடங்கிய சோதனை செவ்வாய் கிழமையும் நீடித்தது. விசாகப்பட்டினம், திருப்பதி, விஜயவாடா, மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி ஆகிய பகுதிகளில் அவருக்கு சொந்தமான 15 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கோலா வெங்கட ரகுராமி ரெட்டிக்கு ஷீரடியில் ஹோட்டல், விஜயவாடா அருகில் 300 ஏக்கர் நிலம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் உள்ளன.
கோலா வெங்கட ரகுராமி ரெட்டி புதன்கிழமையுடன் ஓய்வுபெறுகிறார். இதனையொட்டி, அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் வெளிநாட்டில் பார்ட்டி கொடுக்க திட்டமிட்டு, அதற்காக விமான டிக்கெட்டுகளையும் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புதுறையால், கோலா வெங்கட ரகுராமி ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
சொத்து விவரம்
10 கிலோவிற்கும் அதிகமான தங்கம், வைரம் நகைகள். அவற்றின் மதிப்பு: சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ. 5 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், ரூ.43 லட்சம் ரொக்கப்பணம். விஜயவாடா அருகில் உள்ள கண்ணாவரத்தில் 10,335 சதுர அடியில் பிளாட், வெல்பூரில் 2 ஏக்கர் நிலம் உள்ளன. கிருஷ்ணா மாவட்டத்தில் 11 ஏக்கரில் மாந்தோப்பு. குண்டூரில் 5.15 ஏக்கர் நிலம், விஜயவாடாவில் மூன்று மாடி கொண்ட இரண்டு வீடுகள் மற்றும் இரண்டு மாடி வீடு. இதேபோல, சாய் சதானா இன்ஃரா ப்ராஜெக்ட், சாய் சாரத அவென்யூ உள்ளிட்ட நான்கு கம்பெனிகள்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும்போது, இந்த சொத்துகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் சுமார் ரூ.500 கோடி மதிப்பு இருக்கும். ரெட்டியின் வங்கிக் கணக்குகள் குறித்து இன்னும் சோதனை நடத்தப்படவில்லை, வங்கிக் கணக்குகளில் பார்த்தால் தான் இவரது கையிருப்பு தொகை குறித்து தெரியவரும். வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
ரெட்டியின் உறவினரான, விஜயடாவா நகராட்சி பொறியாளர் பிரிவில் பணிபுரியும் சிவ பிரசாத் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் ரெட்டியின் பினாமியாக சிவ பிரசாத் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
சிவ பிரசாத் அவரது வீட்டில் உள்ள வாஷிங் மெஷினில் சுமார் ரூ.19 கோடி மதிப்பில், கிலோ கணக்கில் தங்க, வைர நகைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் சிவ பிரசாத்தின் மறை காயத்ரியும் பினாமியாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. காயத்ரி பெயரில் பல்வேறு ஆவணங்கள் இருப்பதும் கண்டறியப்பட்ட நிலையில், தங்க ஆபரணங்கள், தங்க சிலைகள் ஆகியவையும் சிக்கின. மங்களகிரியல் பல்வேறு அபார்ட்மென்டில் 16 ப்ளாட்களும், பல்வேறு காம்லக்ஸ், 100-ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களும் உள்ளனவாம். இதேபோல, எட்டுபேர் ரெட்டிக்கு பினாமியாக இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.