ரூபா டிமவுட்கில் ஐ.பி.எஸ்..!
கர்நாடகாவை சேர்ந்த இந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, ஒரே நாளில் உலகையே தன்னைப் பற்றி பேச வைத்திருக்கிறார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் தமிழக பிரபலமான சசிகலாவிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவருக்கு சிறைத்துறை அதிகாரிகள் ராஜ உபசாரம் செய்வதாக இவர் கொடுத்த ‘ரிப்போர்ட்’தான் இப்போது ஹாட் டாக்!
1990 வாக்கில் நடிகை விஜயசாந்தி நடித்து சக்கைபோடு போட்ட ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’, நாற்பதை கடந்தவர்களுக்கு ஞாபகம் இருக்கும். விஜயசாந்தியை, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்கிற சிம்மாசனத்தில் உட்கார வைத்த படம் அது. அதை பார்க்காதவர்கள், இந்த ரூபா டிமவுட்கிலின் நிஜ சாகசங்களை பார்த்தால் போதும் என்கிறார்கள் பெங்களூரு பத்திரிகையாளர்கள்.
ரூபாவின் பூர்வீகம், பெங்களூருவுக்கு வடக்கே 260 கி.மீ. தொலைவில் உள்ள தாவண்கெரே! 2000-மாவது ஆண்டு ‘பேட்ச்’ ஐ.பி.எஸ். அதிகாரி இவர்! அந்த ஆண்டு சர்வீஸ் கமிஷன் தேர்வில் அகில இந்திய அளவில் இவர் 43-வது ரேங்க் எடுத்தார். இவர் விரும்பியிருந்தால் ஐ.ஏ.எஸ்.ஸை தேர்வு செய்து கலெக்டராக போயிருக்கலாம். அல்லது, ஐ.எப்.எஸ்.-ல் இணைந்து வெளிநாட்டுப் பணிக்கு போயிருக்கலாம். ஆனால் சவாலான ஐ.பி.எஸ். பணிதான் ரூபாவின் தேர்வாக இருந்தது.
ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் ஐ.பி.எஸ். பயிற்சியின்போது இவரது ‘பேட்ச்’சில் 5-வது இடத்தைப் பிடித்தார். அந்த ‘பேட்ச்’சில் கர்நாடகாவில் பணி ஒதுக்கீடு பெற்ற ஒரே கன்னட அதிகாரி இவர்தான்.
துப்பாக்கி சுடுவதில் ரூபா திறமைசாலி. இதற்காக தேசிய போலீஸ் அகாடமியில் ஏராளமான பதக்கங்களை பெற்றிருக்கிறார். கடந்த 2000-மாவது ஆண்டு பீதர் மாவட்ட எஸ்.பி.யாக இவர் பொறுப்பேற்றதும், அங்கு கோலோச்சிய கனிமவளக் கொள்ளையர்களை தெறிக்கவிட்டதுதான் இவரது முதல் அதிரடி! ஆனால் அதற்கு கைமேல் கிடைத்த பரிசு, டிரான்ஸ்பர்! குறுகிய காலத்தில் யாதகிரி, தும்கூர், கதக் என வெவ்வேறு மாவட்டங்களுக்கு இவரை அதிகாரவர்க்கம் பந்தாடியது.
எனினும் தார்வார் மாவட்ட எஸ்.பி.யாக ரூபா இருந்தபோது, ஹூப்ளியில் நடந்த கலவரங்களுக்காக இப்போதைய மத்திய அமைச்சர் உமாபாரதியை கைது செய்தார். அந்த கைதுக்காக உத்தரவை பிறப்பித்தவர், அப்போது ஹூப்ளி மாவட்ட நீதிபதியாக இருந்த மைக்கேல் டி குன்ஹா! ஆம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், சசிகலாவையும் சிறைக்கு அனுப்பிய அதே குன்ஹாதான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு மாநகர இணை ஆணையராக ரூபா பணி செய்தபோது, தேவையின்றி பல அதிகாரிகள் வி.ஐ.பி. பாதுகாப்பு என்ற பெயரில் வேலைக்கு ‘டிமிக்கி’ கொடுப்பதை கண்டுபிடித்தார். உடனே அந்த அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்து, அத்தனை பேரையும் வி.ஐ.பி. பாதுகாப்புப் பணியில் இருந்து விடுவித்து, ரெகுலர் டூட்டிக்கு அனுப்பினார். இதனால் உருவான அரசியல் பகைகளை அவர் பொருட்படுத்தவில்லை.
இதேபோல பா.ஜ.க.வின் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, அவரது கான்வாயில் அதிகாரபூர்வமற்ற முறையில் கூடுதலாக போலீஸ் வாகங்கள் செல்வதை கவனித்தார். விதிமுறைகளுக்கு புறம்பாக சென்று கொண்டிருந்த அந்த வாகனங்களை உடனே அங்கிருந்து விடுவித்து உரிய பணிகளுக்கு திருப்பினார். ‘முதலமைச்சரின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்குமோ?’ என்றும் அவர் தயங்கவில்லை.
சமூக வலைதளங்களிலும் ‘ஆக்டிவ்’வாக இயங்குகிறார் ரூபா. பொதுமக்கள் அதில் முன்வைக்கும் கோரிக்கைகளை கவனிக்கிறார். அதிலும்கூட அரசியல்வாதிகள் யாராவது விதண்டாவாதம் செய்தால், அவர்களையும் விடுவதில்லை. அண்மையில் ‘பேஸ்புக்’கில் இவருடன் விவாதம் செய்த பா.ஜ.க.வின் மைசூரு எம்.பி. பிரதாப் சிம்ஹா ஒருகட்டத்தில் விவாதத்தை தொடரமுடியாமல் ‘எஸ்கேப்’ ஆனார்.
கர்நாடக கிரைம் பிராஞ்சில் இவர் பணியாற்றியபோது, உயர் அதிகாரி ஒருவருடன் இவர் நேருக்கு நேராக வாக்குவாதம் செய்தது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சூழலில்தான் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக நியமனம் பெற்று 10 நாட்களிளேயே பரப்பன அக்ரஹார சிறையில் சோதனை மேற்கொண்டு, சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். இது இப்போது இவருக்கும் சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணாவுக்கும் இடையிலான மோதலாக நீள்கிறது. சசிகலாவிடம் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பாக சிறை ஊழியர்கள் சிலரது வாக்குமூலத்தையும், சசிகலாவுக்கு உணவு வழங்குவதில் நடந்த விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் கையில் வைத்துக்கொண்டே ரூபா இந்த விவகாரத்தை எழுப்பியிருப்பதாக கூறுகிறார்கள், சிறை வட்டாரத்தில்!
ஏற்கனவே அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த பிரச்னை, இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு என ஏக சிக்கலில் இருக்கிறார். இந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு உச்சநீதிமன்றத்தில் ‘ரிவ்யூ பெட்டிஷன்’ விசாரணைக்கு வரும் வேளையில் இந்த சிக்கல் வந்து சேர்ந்திருக்கிறது.
இது குறித்து முதல்வர் சித்தராமையா உத்தரவின் பேரில் நடைபெறும் உயர்மட்ட விசாரணையில் உண்மை வெளிவரலாம். அப்பழுக்கற்ற பணிக்காக கடந்த ஆண்டு (2016) குடியரசு தினத்தன்று ஜனாதிபதி பதக்கம் பெற்றிருக்கிறார் ரூபா. இவரது நேர்மை, கர்நாடகாவில் பிரபலம் என்பதால் பொய்யான புகார்களை சுமத்தி இவரை பழிவாங்குவது சுலபமல்ல.
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மீடியாக்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதக்கூடியவர் ரூபா. கர்நாடக மீடியாக்கள் இந்தப் பிரச்னையில் அவருடன் நிற்கின்றன. ரூபாவின் கணவர் பெயர், மனிஷ் மவுட்கில். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், கர்நாடக அரசின் ஊரக குடிநீர் வினியோக ஆணையராக பணியாற்றுகிறார்.
பரபரப்பான போலீஸ் வேலைக்கு மத்தியில், மனதை ‘ரிலாக்ஸ்’ செய்ய இந்துஸ்தானி இசையை கேட்டு ரசிப்பதில் ரூபாவுக்கு ஆர்வம் உண்டு. தவிர, இவர் நன்கு பயிற்சி பெற்ற பரதநாட்டிய கலைஞரும்கூட!
எனவே யாருடைய ஆட்டமும் இவரிடம் எடுபடாது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.