சிறையில் சிறப்பு வசதி : ரூ.2 கோடி கொடுத்த சசிகலா?

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தருவதற்காக, சிறைத்துறை உயரதிகாரி ஒருவருக்கு ரூபாய் 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ஒருவரே குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில்…

By: Updated: July 13, 2017, 11:17:20 AM

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தருவதற்காக, சிறைத்துறை உயரதிகாரி ஒருவருக்கு ரூபாய் 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ஒருவரே குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்தே, சிறைத்துறை விதிகளை மீறி அவருக்கு அதிகாரிகள் சிறப்பு வசதிகள் செய்து தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், அதற்கு சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, காவல் துறை ஐ.ஜி. ஆர்.கே. தத்தாவிற்கு புதன் கிழமை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தருவதற்காக சிறைத்துறை உயரதிகாரி ரூபாய் 2 கோடி லஞ்சம் பெற்றதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அதில், சிறைத்துறை டி.ஜி. சத்யநாராயணா ராவ், சசிகலாவிற்கு சிறப்பு அந்தஸ்துகள் செய்துகொடுப்பதற்காக ரூபாய் 2 கோடி லஞ்சம் பெற்றதாக தன் உயரதிகாரி மீதே குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சசிகலா விரும்பும் உணவுகளை தயார் செய்வதற்காக, அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் சிறைத்துறை விதிமுறைகளை வளைத்து சமையலறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், உணவுப்பொருட்களை சமைத்துத் தருவதற்காக சிறையில் உள்ள பெண் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து பதிலளித்த குற்றம்சாட்டப்பட்ட சத்யநாராயணா, “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்யட்டும். இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பொறுப்பு அவற்றை எழுப்பிய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவிற்கே உள்ளது. சிறையில் சசிகலாவுக்கென தனி சமையலறை வசதி செய்து தரப்படவில்லை.”, என கூறினார்.

மேலும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சத்யநாராயணா, ரூபாவிற்கு தான் இரண்டு முறை மெமோ அனுப்பியதாகவும், அதற்கு பழிவாங்கும் முயற்சியாகவே தன் மீது இந்த குற்றச்சாட்டுகளை அவர் எழுப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் தற்போது சிறைத்துறை அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது குறித்து கர்நாடக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், இந்த குற்றாச்சாட்டுகளுக்காக சசிகலா மீது மேலும் வழக்குகள் தொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், சசிகலா தரப்பில் லஞ்சம் வழங்கப்பட்டது உண்மையானால் அது யார் மூலம் சிறைத்துறை அதிகாரிகளை சென்றடைந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sasikala paid bribe to jail official

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X