சசிகலாவுடன் இருந்த 32 கைதிகள் வேறு சிறைக்கு திடீர் மாற்றம்! காரணம் என்ன?

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த 32 சிறை கைதிகள் நேற்று திடீரென பெல்லாரி மற்றும் பெரகாவியில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்

சசிகலாவுடன் தண்டனை அனுபவித்து வந்த 32 கைதிகள் திடீரென நேற்று வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெங்களூர், பரைப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் முறைகேடுகள் நடப்பதாக சிறைத்துறை டிஐஜி டி ரூபா புகார் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக இரு அறிக்கைகளை காவல்துறை உயரதிகாரிகளிடம் ரூபா ஒப்படைத்திருக்கிறார். குறிப்பாக, சசிகலா தரப்பினரிடம் டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்டஅதிகாரிகள் ரூ.2 கோடி பெற்றுக் கொண்டு, சசிகலாவிற்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை டிஜிபி சத்தியநாராயண ராவ் மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்துமாறு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த 32 சிறை கைதிகள் நேற்று திடீரென பெல்லாரி மற்றும் பெரகாவியில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் தெரிவிப்பதாவது: சிறைக்கு ரூபா வருகை தந்த போது, அங்கிருந்த கைதிகளில் சிலர் அவருக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பினர். ஆனால், மற்றொரு தரப்பினரோ ரூபா-விற்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மற்றொரு சிறைத்துறை அதிகாரிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகவும், அப்போது அவர்களிடையே கைகலப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக சுமார் 32 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும், கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டதின் பின்னணியில் மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. சிறையில் இருந்த உயர் அதிகாரிகள் மீது கைதிகள், ஊழல் புகார் தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க இருப்பதாகவும், இதன் காரணமாகவே அவர்கள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

×Close
×Close