சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி: நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்!

சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது

1991 – 96 ஆண்டுகளில் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அப்போதைய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்.

அப்போது தமிழக ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று, ஜூன் 14, 1996-ல் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை இதனை புலனாய்வு செய்ய உத்தரவிட்டார். இச்சொத்துக்களின் அன்றைய மதிப்பு 66.65 கோடி ரூபாயாகும்.

பின், ஜூன் 31-ஆம் தேதி மீண்டும் மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி.யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க உத்தரவிட்டார். அவ்விசாரணையின் படி ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் வெளியானார். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கு 1996-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசால், 1996 டிசம்பர் அன்று அரசுத் தரப்பு வழக்காக மாற்றப்பட்டது. 1996 டிசம்பர் மாதத்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வண்ணத் தொலைக்காட்சி வழக்குக்காக சோதனையிட்டு, அசையும் சொத்துக்களாக 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 ஜோடி காலணிகள், 10,500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் மற்றும் சில மதிப்புமிக்க பொருட்களை கைப்பற்றியது. அவையனைத்தும் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் காப்பகத்தில் வைக்கப்பட்டன.

1997-ல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டு சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டது.
பின் 2003 நவம்பர் 18-ஆம் தேதி இவ்வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 2014 செப்டம்பர் 27-ஆம் தேதி, ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து அவர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இந்த தண்டனையிலிருந்து தனக்கு பிணை வழங்க வேண்டும் என ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்திருந்தார். 2014, டிசம்பர் 18-ஆம் தேதி வரை இடைக்கால நிபந்தனையுடன் கூடிய பிணை அவருக்கு வழங்கப்பட்டது.

பின் ஜெயலலிதா தொடர்ந்த மேல் முறையீட்டில், நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை எனக் கூறி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த விடுதலைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 2015 ஜூலை 16 -ஆம் தேதி கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இதற்கிடையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து, 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜெயலலிதா உட்பட அனைவரும் குற்றவாளிகள் தான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச் சூழலில் சட்டரீதியாக தங்களுக்கு உள்ள கடைசி வாய்ப்பான சீராய்வு மனுவை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், ‘லஞ்ச வழக்குகளில் அரசு ஊழியரைத்தான் தண்டிக்க முடியும். இந்த வழக்கில் அரசு ஊழியரான ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துவிட்டது. எனவே எங்களை தண்டிப்பது நியாயமல்ல. எங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும்’ என கேட்டிருந்தனர்.

இந்த சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அமிதவா ராய் ஆகியோர், “சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில், எந்த இடத்திலும் சிறு பிழையைக் கூட நாங்கள் பார்க்கவில்லை” என்று கூறி சசிகலா உள்ளிட்டோரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.  இதனால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் நான்கு ஆண்டுகால சிறைத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சொத்துக் குவிப்பு வழக்கினை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சசிகலா தரப்பினரது கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டரீதியாக இனி சசிகலா தரப்பு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியாது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close