இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’வுக்கு பின்னடைவாக, சாட்டிலைட்டை அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டது. அதன்படி 7 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுவிட்டன. முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுட்காலம் நிறைவடையவுள்ள நிலையில், புதியதாக செயற்கைக்கோளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 1,425 கிலோ எடைகொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் இன்று (ஆக.31) விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று இரவு 7 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஆனால் குறிப்பிட்ட தூரம் சென்றதும், சாட்டிலைட்டை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க பொருத்தப்பட்டிருந்த உபகரணம் அதிலிருந்து பிரியவில்லை. இதனால் சாட்டிலைட்டை சுற்று வட்டப் பாதையில் ராக்கெட்டால் நிலை நிறுத்த முடியவில்லை. எனவே இந்த சாட்டிலைட் அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்தத் தகவலை விண்வெளி ஆய்வு மையத் தலைவர் கிரண்குமார் அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இந்த செயற்கைகோள் மூலம், இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
விண்வெளித்துறையில் அரும்பெரும் சாதனைகளை படைத்து வரும் இஸ்ரோவின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது, விஞ்ஞானிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.