அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்ட இந்தியாவின் நற்பெயருக்கு பிரிவினைவாத சக்திகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது என அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நியூயார்க் நகரில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் இரு வாரகால சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் இறுதி கட்டத்தில் இருக்கும் அவர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, மறைமுகமாக பிரதமர் மோடி அரசை சாடிய ராகுல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்ட இந்தியாவின் நற்பெயருக்கு பிரிவினைவாத சக்திகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரிவினைவாத அரசியல் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அது நாட்டுக்கு ஆபத்து. அதற்கு எதிராக வெளிநாடு வாழ் இந்தியர்கள் எழ வேண்டும் என வலியுறுத்தினார்.
வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது நம் நாடு என குறிப்பிட்ட ராகுல், இந்தியாவிற்கு வந்து, நாட்டுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவின் முன்னேற்றத்துக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அப்துல் கலாம் ஆசாத், சர்தார் படேல், பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் வெளிநாடு வாழ் இதியர்களாக இருந்தனர். அவர்கள் நாடு திரும்பிய போது, அவர்களது கற்றல்களையும், படிப்பினையையும் நாட்டுக்கு எடுத்து வந்து நாட்டை மாற்றினார்கள் எனவும் ராகுல் குறிப்பிட்டு பேசினார்.
முன்னதாக, பிரின்ஸ்டனின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகுல், இன்றைய உலகின் முக்கியப் பிரச்னையாக இருப்பது வேலையில்லாத் திண்டாட்டம். இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புச் சந்தையில் புதிதாக இணைகின்றனர். ஆனால், இந்திய அரசு ஒரு நாளைக்கு 500 பேருக்குத் தான் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது என்றார்.
இந்தியாவில் இந்த வேலையில்லா திண்டாட்டத்தை அரசியலாக உருவாக்கித்தான் பிரதமர் மோடி பதவி ஏற்றுள்ளார். தேர்தலின் போது அவர் அளித்த வாக்குறிதியின் அடிப்படையில் அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை என்றும் அப்போது ராகுல் குற்றம் சாட்டினார்.