சிஎஸ் கர்ணனுக்கு 6-மாத சிறை தண்டனை… உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதற்காக சிஎஸ் கர்ணனுக்கு 6-மாத சிறை தண்டனை

By: Updated: May 12, 2017, 11:25:37 AM

நீதிபதி சிஎஸ் கர்ணனுக்கு 6-மாத சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிஎஸ் கர்ணன் பிறப்பித்த உத்தரவுகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை உத்தரவும் பிறப்பித்துள்ளது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகளாக நீதியாக பணியாற்றியவர் சிஎஸ் கர்ணன்.இதனிடையே சிஎஸ் கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.   சென்னை நீதிமன்றத்தில் இருந்த சக நீதிபதிகள் குறித்து பல்வேறு புகாரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பி வைத்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து சிஎஸ் கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
 
இதைத் தொடர்ந்து கடந்த 31-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சிஎஸ் கர்ணன் ஆஜர் ஆனார். ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கிய எந்த உத்தரவையும் அவர் மதித்து நடக்கவில்லை.  இதன் காரணமாக, கடந்த பிப்ரவரி 8-ம் தேதி முதல் சிஎஸ் கர்ணன் பிறப்பித்த எந்த உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
 
மேலும், சிஎஸ் கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்து, அது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 8-ம் தேதி  அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த ஏப்ரல்-4-ம் தேதி சிஎஸ் கர்ணன் மனநிலை குறித்து பரிசோதனை நடத்துவதற்காக மருத்துவ குழுவினர் அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர். ஆனால், தான் நல்ல மனநிலையில் தான் இருப்பதாக கூறிய சிஎஸ் கர்ணன், மனநல பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
 
மேலும், தனக்கு மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு மனநல பரிசோதனை நடத்த வேண்டும் பதில் உத்தரவை பிறப்பித்தார். இந்த பரிசோதனையை எய்ம்ஸ் மருத்துவர் குழு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் கேஎஸ் கேஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளும் தன்முன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
 
அதன்படி அவர்கள் ஆஜராகவில்லை என்பதால், அவர்கள் அனைவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரவைத்தார்.  இதனிடையே நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட 7  நீதிபதிகளுக்கு தலா 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டணை விதிப்பதாக சிஎஸ் கர்ணன் உத்தரவிட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல், நீதிபதிகள் அனைவருக்கும்  தலா ரூ.1,00,000 அபராதம் விதிப்பதாகவும், அவ்வாறு செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாற்காக சிஎஸ் கர்ணனுக்கு 6-மாத சிறை தண்டனை விதிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதன் மூலம் நீதிமன்ற  வரலாற்றிலேயே முதன்முறையாக நீதிபதி ஒருவர் சிறைக்கு செல்கிறார். சிஎஸ் கர்ணனை உடனடியாக கைது செய்ய மேற்கு வங்க காவல்துறைத் தலைமை இயக்குனருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Sc finds justice cs karnan guilty of contempt of court sentenced to jail for 6 months

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X