சிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற குழந்தைகளின் முகத்தில் முத்திரை குத்திய நிர்வாகம்

போபால் மத்திய சிறையில், தன் நெருங்கிய உறவினரை ரக்‌ஷா பந்தன் தினத்தன்று காணச் சென்ற சிறுவர், சிறுமியின் முகத்தில் சிறை பணியாளர் முத்திரை குத்தப்பட்டது

போபால் மத்திய சிறையில், தன் நெருங்கிய உறவினரை ரக்‌ஷா பந்தன் தினத்தன்று காணச் சென்ற ஒரு சிறுவர் மற்றும் சிறுமியின் முகத்தில் சிறை பணியாளர் முத்திரை குத்திய சம்பவம், பல்வேறு தரப்புகளிலிருந்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் மத்திய சிறையில், திங்கள் கிழமை ரஷா பந்தன் தினத்தன்று சிறையில் உள்ள தன் நெருங்கிய உறவினரைக் காண அவர்களது பெற்றோர்களுடன் சென்றிருந்தனர். அப்போது சிறை பணியாளர் ஒருவர் சிறுவர், சிறுமி இருவருக்கும் உள்ளே செல்ல அனுமதி பெற்றதைக் குறிப்பிடும் வகையில், அவர்களது முகத்தில் முத்திரை குத்தியுள்ளார். மேலும், அக்குழந்தைகள் மீண்டும் சிறைக்கு உள்ளே செல்லக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக முத்திரை குத்தப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இச்சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து, மத்தியபிரதேச அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அம்மாநில சிறைத்துறை அமைச்சர் குசும் மெஹ்தலே கூறியதாவது, “இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”, என தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து மத்தியபிரதேச மனித உரிமைகள் ஆணையம் சிறைத்துறை டி.ஜி.பி.யிடம் அறிக்கை கேட்டுள்ளது.

“இது மிகவும் மோசமான நிகழ்வு. குழந்தைகளின் முகத்தில் முத்திரை குத்துவது என்பது, அவர்களின் மனநிலையை வருங்காலத்தில் பாதிக்க செய்வதாக இருக்கும்.”, என மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ராகவேந்திரா கூறினார்.

“ரக்‌ஷா பந்தன் தினத்தன்று இந்த சிறைக்கு 8,500 பேர் வருகை தந்தனர். அதனால், பணியாளர்கள் கவனிக்காமல் குழந்தைகள் முகத்தில் முத்திரை குத்தியிருக்கலாம். எப்படியிருந்தாலும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.”, என சிறையின் கண்காணிப்பாளர் தினேஷ் நார்கவே கூறினார்.

போபால் மத்திய சிறைக்கு வரும் வெளிநபர்களுக்கு முத்திரை குத்துவது வழக்கமானது. சிறைக்கைதிகளுடன் அவர்களை வேறுபடுத்த இம்முறை கடைபிடிக்கப்படுவதாக சிறைத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், பார்வையாளர்களின் உடம்பில் முத்திரை குத்துவது குறித்து சிறை கையேட்டில் இல்லை என, சிறைத்துறை டி.ஜி.பி. ஜி.ஆர். மீனா கூறினார். ஆனாலும், சிறையில் நுழைவதற்கு முன் பார்வையாளர்களின் கையில் முத்திரை குத்தப்படுகிறது.

×Close
×Close