பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்ட கலெக்டராக இருப்பவர் கன்வால் தனுஜ். இவர் அங்குள்ள கிராமத்தில் நடந்த தூய்மை இந்தியா திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த கிராமத்தில் தலித் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே அதிகம் பயன்படுத்தி வந்தனர். இதனால், அந்த கிராமத்து மக்கள் கழிப்பறை கட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, பீகார் அரசு ஒரு திட்டம் கொண்டு வந்திருந்தது. அதில், கழிப்பறை கட்டும் மக்கள் ரூ.12 ஆயிரம் வழங்கினால், மீதி பணத்தை அரசு செலுத்தி கழிவறை கட்டி கொடுக்கும் என்று தெரிவித்து இருந்தது. இந்த திட்டத்தைப் பற்றி கலெக்டர் கன்வால் தனுஜ் பொதுமக்கள் மத்தியில் விளக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, பொதுமக்களில் ஒருவர் எழுந்து, "கழிவறை கட்டுவதற்கு எங்கள் பங்கு தொகையான ரூ.12 ஆயிரம் கொடுப்பதற்கே எங்களிடம் பணம் இல்லை" என்று கூறினார்.
உடனே கோபம் அடைந்த கலெக்டர் கன்வால், "உங்களிடம் பணம் இல்லை என்றால் உங்களுடைய மனைவியை விற்பனை செய்துவிடுங்கள், அந்தப் பணத்தை கழிவறை கட்ட பயன்படுத்துங்கள். உங்களுடைய மனநிலை இப்படித்தான் இருக்கும் என்று சொன்னால் மனைவியை விற்பது தான் ஒரே வழி' என்று நிதானமிழந்து பேசினார்.
மேலும் ஆட்சியர் தொடர்ந்து பேசுகையில், "நீங்கள் ஏழையாக இருக்கலாம். ஆனால், நிச்சயம் 12 ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு உங்களால் முடியும். உங்கள் மனைவியின் மதிப்பு ரூ.12 ஆயிரத்திற்கும் குறைவு என்று நீங்கள் நினைத்தால், பணம் கொடுக்க வேண்டாம். உங்கள் மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கருதினால் ரூ.12 ஆயிரம் பணத்தை கொடுங்கள்" என்று கூறினார்.
அங்கு கூடியிருந்த மக்கள், கலெக்டர் இப்படி பேசியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிலர், அவர் பேசிய பேச்சுக்களை வீடியோவில் பதிவு செய்து சமூக தளங்களில் வெளியிட்டனர்.
பின் இந்த பேச்சு குறித்து கலெக்டரிம் கேட்டபோது, "எல்லா மக்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் கழிவறை கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் அவ்வாறு பேசினேன்" என்று விளக்கமளித்தார்.
https://www.youtube.com/embed/UzBN4M0axTc