பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் புகாரில் கைது

பிரபல மலையாள செய்தி தொலைக்காட்சியின் மூத்த செய்தி ஆசிரியர் பெண் பத்திரிக்கையாளரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக காவல் துறையினர் கைது செய்தனர்.

பிரபல மலையாள செய்தி தொலைக்காட்சியின் மூத்த செய்தி ஆசிரியரும் தொகுப்பாளருமான அமல் விஷ்ணுதாஸ் என்பவர், அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண் பத்திரிக்கையாளரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக காவல் துறையினர் கைது செய்தனர்.

பிரபல மலையாள செய்தி தொலைக்காட்சியான மாத்ருபூமியின் மூத்த செய்தி ஆசிரியர் மற்றும் தொகுப்பாளர் அமல் விஷ்ணுதாஸ். இவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் புகார் அளித்ததன் அடிப்படையில், அமல் விஷ்ணுதாஸை காவல் துறையினர் செவ்வாய் கிழமை இரவு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அமல் விஷ்ணுதாசும் புகார் கூறிய பெண்ணும் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தன்னுடைய திருமண வாழ்க்கை நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் விரைவில் தம் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி, தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் பத்திரிக்கையாளர் தன் புகாரில் தெரிவித்தார். ஆனால், விவாகரத்து பெற்ற பின்னர் அமல் விஷ்ணுதாஸ் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இருவருடைய உறவு குறித்து வெளியே சொன்னால் அவருடைய ஊடக வாழ்க்கையை சீரழித்துவிடுவதாக, அமல் விஷ்ணுதாஸ் மிரட்டியதாக புகாரில் கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அமல் தாஸ் தன் தந்தையின் மருத்துவ செலவுக்கு எனக்கூறி அப்பெண்ணிடம் பணத்தையும் ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அமல் விஷ்ணுதாஸ் கைது செய்யப்பட்ட பிறகு அந்த செய்தி தொலைக்காட்சி நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்துவிட்டதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் அமல் விஷ்ணுதாஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

×Close
×Close