உத்தரப்பிரதேச மாநிலத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்து அதிர்ச்சியை நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மூளை வீக்கம் காரணமாக மேலும் ஏழு குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் சுமார் 60 பேர் மூளை வீக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்த நாட்களில் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதையடுத்து 12-ம் தேதியன்று 11 குழந்தைகளும், 13-ம் தேதி (இன்று) ஒரு குழந்தையும் மூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளன. இதனால், குழந்தைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை 72-ஆக உயர்ந்தது.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனைக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) சிலிண்டர் விநியோகித்து வந்த தனியார் நிறுவனம் தனது நிலுவைத் தொகைக்காக ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் அடுத்தடுத்து பலியானதற்குக் காரணம் எனக் கூறப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆளும் பாஜக பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன. ஆனால், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது என குற்றம் சாட்டியுள்ள அம்மாநில அரசு, இதுகுறித்து நீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்லூரி முதல்வரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது.
இந்த சோக வடு நெஞ்சை விட்டு நீங்காத நிலையில், அதே பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூளை வீக்கம் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மேலும் ஏழு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.