ஏழு நாட்களாக கூடிய கூட்டம், நீதிமன்ற எச்சரிக்கை: ஹரியானா பாஜக அரசு அலட்சியம்

தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே கடந்த ஏழு நாட்களாக தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தொண்டர்கள், சிறிது சிறிதாக பஞ்ச்குலாவில் பெருக ஆரம்பித்தனர்.

குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே, கலவரத்தை ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகளை ஹரியானா மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அலட்சியமாக கையாண்டுள்ளது.

பஞ்சாப் – ஹரியானா மாநில உயர் நீதிமன்றத்தில், குர்மீத் ராம் ரஹீம் சிங் தீர்ப்பையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய பொது நல வழக்கு ஒன்று மீதான விசாரணை நேற்று காலை 11.30 மணி அளவிற்கு மீண்டும் நடைபெற்றது. அப்போது, ஆஜராகிய ஹரியானா அரசு வழக்கறிஞர், “பொதுப் பூங்கா மற்றும் சமுதாயக் கூடம் ஆகிய இரண்டு இடங்கள் தவிர்த்து, மற்ற இடங்களில் இருந்து தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தொண்டர்கள் பெரும்பாலும் பஞ்ச்குலாவில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்” என்று விளக்கம் அளித்தார். அப்போது, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது எவ்வித ஆயுதத்தையும் உபயோகிக்க தயங்க வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன் பின்னர் சுமார் மூன்று மணி நேரம் கழித்து தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு விவரங்கள் வருகிற 28-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

தீர்ப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் கலவரம் வெடிக்கிறது. ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே திரண்ட கலவரக்காரர்களுக்கும், அவர்களை ஒடுக்க வந்த போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. அரசாங்க கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பாக இதுவரை 1000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கலவரத்துக்கு ஆளும் பாஜக அரசின் முதல்வர் மனோகர் லால் கட்டார் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், கலவரம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகள் தென்பட்டும் அவற்றை ஹரியானாவை ஆளும் பாஜக அரசு அலட்சியப் போக்குக்குடன் கையாண்டுள்ள விஷயம் தெரியவந்துள்ளது.

திடீரென தீவிரமடைந்துள்ள இந்த வன்முறை சம்பவமானது நம்மை திடுக்கிட வைத்துள்ளது. ஆனால், இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், தீர்ப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே, அமைதி காக்க வேண்டும் என ஹரியானா முதல்வர் கட்டார் கோரிக்கை விடுத்தார். இது காலந்தாழ்ந்த ஒன்று.

தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே கடந்த ஏழு நாட்களாக தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தொண்டர்கள், சிறிது சிறிதாக பஞ்ச்குலாவில் பெருக ஆரம்பித்தனர். ஆனால், எந்த ஒரு அமைச்சரோ, எம்எல்ஏ-வோ, ஆளும் பாஜக-வோ ஏன் எதிர்க்கட்சிகள் கூட இதுகுறித்து குரல் கொடுக்கவில்லை.

பாஜக ஹரியானா மாநில செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தலைமையில், சுமார் 19 எம்எல்ஏ-க்கள் தேரா சச்சா-வை கடந்த 2014-ஆம் ஆண்டு சந்தித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு கூடிய விரைவில், ஹரியானா மாநில அரியணையை பாஜக கைப்பற்றியது.

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

ஆளுங்கட்சிகோ, எதிர்க்கட்சிக்கோ ஏதோ ஒரு தருணத்தில் அல்லது பல நேரங்களில் அவர்களது அரசியல் அதிகாரத்தை காண்பிக்க தேரா சச்சா சவுதா அமைப்பினரை அணி திரட்டியிருக்கலாம். ஆனால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை என்று வரும் பொழுது, சிறிய ஆதராங்கள், அறிகுறிகள் தென்பட்டாலும் பிரச்னையை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல் கூட்டம் அதிகளவு கூட மாநில அரசு அனுமதித்துள்ளது.

தேரா சச்சா சவுதா தொண்டர்கள் அதிகளவு கூடுவதை கட்டுப்படுத்த விரும்பாத அம்மாநில அமைச்சர் ராம்பிலாஸ் ஷர்மா, காவல்துறை, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் என அனைவரும், “இக்கூட்டம் தேரா சச்சா சவுதா அமைப்பின் அமைதியை விரும்பும் தொண்டர்கள் கூட்டம்” என தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் – ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் கூட நேற்றைய விசாரணையின் போது, “தேரா அமைப்பினருடன் சேர்ந்து கொண்டு மாநில அரசு கூட்டுச் சதி செய்கிறது” என குற்றம் சாட்டியது. மேலும், தரம் குன்றிய இரண்டு ஊரடங்கு உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது என சாடிய உயர் நீதிமன்றம், ஆயுதங்களுடன் நுழைபவர்கள் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தது. “உச்ச நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளான பின்னரே, தனது உத்தரவுகளில் திருத்தம் செய்த மாநில அரசு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் பஞ்ச்குலாவில் கூடுவதை தடுத்து நிறுத்தியுள்ளது”.

மூன்று நாட்களுக்கு முன்னதாக, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராம் நிவாஸ் கூறுகையில், “எவ்வித நிலைமையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். அமைதியை சீர்குலைக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் ” என்றார்.

அதேபோல், “எந்த நிலைமையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நிலைமை சீர்குலைய அனுமதிக்க மாட்டோம்” என ஹரியானா மாநில காவல் துறை தலைவர் பிஎஸ் சாந்து இந்த வாரம் முழுவதும் தெரிவித்து வந்தார்.

ஆனால், அவர்கள் அறிவிப்பு எதுவும் இன்று பயனளிக்கவில்லை. கலவரம் வெடித்து அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பரிதாமாக உயிரிழந்து, நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தது தான் மிச்சம். தற்போதும் கூட காவல்துறைக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே சரியான ஒத்துழைப்பு இல்லை. விரக்தியுடனே துணை ராணுவப் படையினர் காணப்படுகின்றனர்.

முதல்வர் மனோகர் லால் கட்டார் சந்திக்கும் மூன்றாவது கலவரம் இது. கடந்த 2014-ஆம் ஆண்டு சாமியார் ராம்பால் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஆறு பேர் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாட் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close