18 வயது நிறம்பாத சிறுமியை மணந்து, அவருடன் பாலியல் உறவு கொள்வதும் வன்கொடுமையே என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக, அரசு சாரா அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தது. அம்மனுவில் கூறப்பட்டதாவது, ”இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 375 உட்பிரிவு (2)-ன் படி, 15 வயதுக்குக் கீழுள்ள தன் மனைவியுடன் ஒருவர் பாலியல் உறவுகொள்வது வன்கொடுமையாகாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பாக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி, 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களை குழந்தைகளாகவே கருத வேண்டும் என கூறுகிறது. சட்டப்பிரிவுகள் 14, 15, 21 ஆகியவற்றை மீறுகிறது. இது அடிப்படை உரிமைக்கு எதிரானது.” , என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் மதன் லோகூர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 18 வயதுக்கு குறைவான சிறுமியை மணந்து, அவருடன் பாலியல் உறவு கொள்வதும் வன்கொடுமையே என அதிரடியாக தீர்ப்பளித்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஓராண்டுக்குள் தன் கணவர் மீது புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு திருமணமாகி அவரின் விருப்பத்துடன் கணவர் உடலுறவு வைத்துக் கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணங்கள் இந்தியாவில் அதிகமாக நடைபெறுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், அவற்றை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.