மாநிலங்களவை குழுத் தலைவர் பதவியில் இருந்து சரத் யாதவ் அதிரடி நீக்கம்

ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் – காங்கிரஸ் – ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஆட்சியை பிடித்தது. முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக, ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சித் தலைவரான லாலுவின் மகன் தேஜஸ்வியும் பதவியேற்றனர்.

ஆட்சியை பிடித்தது முதலே, ஐக்கிய ஜனதாதளம் – ராஷ்ட்ரீய ஜனதாதளம் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது. இந்த சூழலில் தேஜஸ்வி, லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. ஊழல் புகார் காரணமாக இந்த சோதனை நடைபெற்றதாக சிபிஐ கூறியது. ஆனால், அரசியல் பழிவாங்கல் காரணமாக இந்த சோதனை நடைபெற்றதாக பாஜக மீது லாலு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என நிதிஷ் வலியுறுத்தி வந்தார். ஆனால், தேஜஸ்வி பதவி விலக மறுப்பு தெரிவித்த காரணத்தால், தனது பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். ஆனால், ராஜினாமா செய்த 24 மணி நேரத்துக்குள்ளாகவே, பாஜக ஆதரவுடன், பீகார் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார்.

நிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ் கடும் அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சரத் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலங்களவையில் தங்கள் கட்சியின் தலைவராக ராம்சந்திர பிரசாத் சிங் செயல்படுவார் என ஐக்கிய ஜனதாதளம் அறிவித்தது.

கடந்த 1984-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ராம்சந்திர பிரசாத் சிங், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, கடந்த 2010-ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் சேர்ந்தவர். மேலும், நிதிஷ்குமாருக்கு மிகவும் நெருக்கமானவராகவும் அறியப்படுபவர்.

ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவராக ராம்சந்திர பிரசாத் சிங் நியமிக்கப்பட்டது தொடர்பான கடிதத்தை, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து அக்கட்சியின் நிர்வாகிகள் அளித்துள்ளனர்.

ஏற்கனவே, காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற காரணத்திற்காக எம்.பி. அலி அன்வரை நாடாளுமன்றக் கட்சிக் குழுவில் இருந்து நிதிஷ்குமார் இடைநீக்கம் செய்திருந்த நிலையில், சரத் யாதவின் பதவி பறிப்பு பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெகா கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் முதல்வரான பின்னர், முதன்முறையாக பிரதமர் மோடியை நிதிஷ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதேபோல், ஆளும் தேசிய ஜனநாயகக்‍ கூட்டணியில் இணையுமாறு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், வருகிற 19-ம் தேதி நடைபெறவுள்ள ஜக்கிய ஜனதாதளக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, முறைப்படி தேசிய ஜனநாயகக்‍ கூட்டணியில் அக்கட்சி இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அக்கட்சிக்‍கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்‍கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம், பீகார் மாநிலம் முழுவதும் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சரத் யாதவ், நிதிஷ்குமாரை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார். பாஜக-வுடன் கைகோர்த்துக் கொண்டு பீகார் மாநில மக்களுக்கு நிதிஷ் துரோகம் விளைவித்து விட்டார் எனவும், ஆட்சிப் பதவியில் இருக்கும் கட்சியினர் மட்டும் தான் நிதிஷ் பக்கம் உள்ளனர். உண்மையான கட்சித் தொண்டர்கள் என்னுடன் தான் உள்ளனர். நான் மெகா கூட்டணியின் பக்கம் தான் உள்ளேன் எனவும் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய சரத் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close