இந்திய ரயில்வேயில் தரமில்லா உணவு வழங்கப்படுகிறது. ராணுவத்தில் வெடிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. காலாவதியான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது என்ற சிஏஜி-யின் அறிக்கை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்திய தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி), தனது ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ரயில்களில் இந்திய ரயில்வே கேட்டரிங் சர்வீசஸ் வழங்கும் உணவு மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றது. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் வெடிமருந்துகளும் தரமானதாக இல்லை. காலாவதியான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு அதிர்சிகர தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய தலைமை தணிக்கைக் குழு தாக்கல் செய்துள்ள ஆய்வறிக்கையில், சிஏஜி மற்றும் ரயில்வே இணைந்து 74 ரயில் நிலையங்கள் மற்றும் 80 ரயில்களில் கூட்டு ஆய்வு மேற்கொண்டதாகவும், அதில், எந்த ஒரு ரயில் மற்றும் ரயில் நிலையத்திலும் உள்ள சமையல் அறைகளில் சுத்தமும், சுகாதாரமும் பேணப்படுவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அடிக்கடி மாற்றியமைக்கப்படும் ரயில்வே உணவுக் கொள்கைகளே இதற்கு காரணம் என்றும் சிஏஜி தெரிவித்துள்ளது.
லக்னோ - ஆனந்த் விகார் டபுள் டக்கர் ரயிலில் கட்லெட்டிற்கு ஆர்டர் கொடுத்த பயணிக்கு இரும்பு ஆணியுடன் கட்லெட் கொடுக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள சிஏஜி, உணவுப் பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது கிடையாது. பொதுவான ரயில்வே தண்ணீரே சில ரயில்களில் உணவுப் பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
அசுத்தமான உணவு பொருட்கள், மறுசுழற்சி உணவுப் பொருட்கள், காலாவதியான பேக்கேஜ் உணவுப்பொருட்கள் மற்றும் பாட்டில்கள், அங்கீகாரம்பெறாத குடிநீர் பாட்டில்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது மற்றும் இவைகளை ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது எனவும் சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பூச்சிகள் மற்றும் தூசியில் இருந்து உணவை பாதுகாக்க மூடி வைக்கப்படுவது கிடையாது. எலிகள், கரப்பான்பூச்சிகள் ரயிலினுள் காணப்படுகிறது என்றும் சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.
அதேபோல் பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை மீதும் தனது அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிஏஜி கூறியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ஆயுத தொழிற்சாலைகள் அமைப்பானது நாடு முழுவதும் 41 தொழிற்சாலைகளை இயக்கி வருகிறது. இந்திய பாதுகாப்பு துறைக்கு வழங்கப்படும் வெடிபொருட்களுக்கு இந்த தொழிற்சாலையே பொறுப்பு. இந்நிலையில், இந்த அமைப்பை விமர்சித்துள்ள சிஏஜி, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் வெடிமருந்துகள் தரமானதாக இல்லை. கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ரானுவதிற்கு தரமான வெடிபொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய ஆயுத தொழிற்சாலைகள் அமைப்பில் உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகளால் உற்பத்தி இலக்கை அடைய முடியவில்லை. பற்றாக்குறை நிலவிய காரணத்தால், வேறு சில தொழிற்சாலைகளிடமிருந்து வெடிமருந்து வாங்க கடந்த 2009-13-ஆம் ஆண்டில் ராணுவ தலைமையகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் வரை இந்த நடவடிக்கை நிலுவையில் தான் உள்ளது. ஒருவேளை போர் வந்தால் இந்திய ராணுவத்தின் வெடிபொருள் கையிருப்பு 10 நாட்களில் தீர்ந்து விடும் என்றும் சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீனாவுடன் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், வெடிமருந்து குறித்த சிஏஜி-யின் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் எல்லை பிரச்னையில் சீனா உக்கிரமாக உள்ளது. கடந்த 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற போரையும் பல ஆண்டுகளுக்கு பின்னர் சீனா தற்போது சுட்டிக் காட்டியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை. மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் தரமான மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தவில்லை என்றும் சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பொது சுகாதார துறைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ.9,500 கோடி செலவு செய்யப்படவில்லை என சுட்டிக் காட்டியுள்ள சிஏஜி, 14 மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகளின் தரம் சோதனை செய்யப்படவில்லை. காலாவதியாகும் தேதியும் சரிபார்க்கவில்லை. இதனால், நோயாளிகள் பல ஆபத்துகளை சந்திக்க நேர்ந்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அந்த மாநிலங்களாவன: அசாம், பிகார், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகும்.
அதேபோல், ஆறு தொலைதொடர்பு நிறுவனங்களால், ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் மற்றும் உரிமம் வழங்குதல் முறைகளில் அரசுக்கு ரூ.7,697.6 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் வெள்ள மேலாண்மை திட்டத்துக்கு மத்திய அரசு விடுவிப்பதாக கூறிய நிதியில் 60 சதவீதம் விடுவிக்கப்படாமல் நிலவும் பற்றாக்குறை. பிரதம மந்திரி ஃபசல் பீம யோஜனா உள்பட பயிர் காப்பீடு திட்டங்களில் காணப்படும் ஓட்டைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சிஏஜி அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.