கேரளாவில் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிரபல மலையாள நடிகை, தன்னை கேரள எம்.எல்.ஏ. ஒருவர் வார்த்தையால் தொடர்ச்சியாக அவமானப்படுத்துவதாக குற்றம்சாட்டி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரபல மலையாள நடிகை கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றம்சாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, காரின் ஓட்டுநர் உள்ளிட்ட சிலரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், இந்த குற்றத்திற்கு சதித்திட்டம் தீட்டியதாக பிரபல மலையாள நடிகர் திலீப்பை சமீபத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், தான் அச்சம்பவத்திற்கு ஆளான முதலே எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் என்பவர், தன்னை வார்த்தையால் அவமானப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுத்தும் அவர் தனது செயல்களை மாற்றிக்கொள்ளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. அதனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அந்த நடிகை கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் என்னை தரக்குறைவாக பேசுகிறார். இந்த மாநிலத்தின் முதலமைச்சராக நீங்கள் இதனை தெரிந்துக் கொள்ள வேண்டும். இந்த துன்புறுத்தலால் நான் எவ்வளவு மன வேதனையை அடைந்தேன் என்பதை கூற இயலாது. இதனால், நான் ஒவ்வொரு நிமிடமும் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். என் அம்மா, அண்ணனால் இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் நான் உடைந்துவிடாமல் கடைசி வரை போராட வேண்டும்
நான் இந்த துன்புறுத்தலுக்கு ஆளான அன்றிலிருந்தே தன்னம்பிக்கையை இழக்கவில்லை. இதில், நான் தோற்றுவிட்டால் என்னைப்போன்ற பல பெண்களில் தோல்வியாக இது ஆகிவிடும். அந்த எம்.எல்.ஏ. “அவர் துன்புறுத்தப்பட்டிருந்தால், மறுநாளே எப்படி நடிக்க கிளம்பிவிடுவார்?”, என கேள்வி எழுப்புகிறார், என தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “நான் அந்த சம்பவம் நடைபெற்ற மறுநாளே படப்பிடிப்புக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அவர் சொல்வதுபோல நான் மறுநாளே செல்லவில்லை. நான் ஒருவாரம் எனது அறையிலேயே இருந்தேன். அத்திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்னை நடிக்குமாறு கூறினர். அந்த சம்பவம் நடைபெற்ற 10 நாட்களுக்குப் பிறகுதான் நான் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தேன்.
என் துறையில் உள்ள சக நண்பர்கள் இல்லையென்றால் நான் இந்த துறைக்கு மறுபடியும் வந்திருக்க மாட்டேன். ஆனால், எப்படி மக்களின் பிரதிநிதி உண்மை தெரியாமல் எப்படி பேச முடியும்?
பி.சி.ஜார்ஜ் போன்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா? அல்லது மனநல காப்பகத்தில் நான் அடைக்கப்பட வேண்டுமா? இல்லையென்றால் பொதுத்தளத்தில் வராமல் நான் எங்காவது மறைந்துக் கொள்ள வேண்டுமா?
நான் என்ன தவறு செய்தேன் என எனக்கு யாராவது கூற முடியுமா?” என கூறியுள்ளார்.
மேலும், சினிமா துறைதான் தனக்கு வாழ்வாதாரம் எனவும், அதிலிருந்து கிடைக்கும் வருமானம் இல்லாமல் தன்னால் வாழ முடியாது எனவும் கடிதத்தில் குறிப்பிட்டார்.
மேலும், எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜின் வார்த்தைகளால் தான் மிகவும் வருத்தத்தில், மன அழுத்தத்திலும் இருப்பதாக கடிதத்தில் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், கேரள முதலமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாக கடிதத்தில் தெரிவித்த அவர், “துன்புறுத்தப்பட்ட எந்த பெண்ணும் பொதுத்தளத்தில் இவ்வாறு அவமானப்படுத்தப்படக் கூடாது. உங்களை நான் நம்புகிறேன் சார்”. என கூறினார்.