மூத்த பத்திரிக்கையாளரும், தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ், லங்கேஷ் பத்திரிக்கையின் ஆசிரியராக செயல்பட்டு வந்தார். இந்துத்துவ அரசியல், சாதியம் இவற்றை கடுமையாக சாடியவர் கவுரி லங்கேஷ். யாருக்கும் அஞ்சாமல், வெளிப்படையாக தம் கருத்துக்களை தன் எழுத்துகளின் வாயிலாக பதிவு செய்த கவுரி லங்கேஷ், கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்துக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை, கடந்த செவ்வாய் கிழமை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொலை செய்தனர்.
அவரது படுகொலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள் தங்களது கண்டனத்தையும், அனுதாபங்களையும் பதிவு செய்தனர். இந்துத்துவத்தை கடுமையாக எதிர்த்ததால், வலதுசாரிய அமைப்பை சேர்ந்தவர்கள் கவுரி லங்கேஷை கொலை செய்திருக்கலாம் என பெரும்பாலானோர் சந்தேகிக்கின்றனர். அவரின் கொலை கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான படுகொலையாக பார்க்கப்படுகிறது.
அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், கவுரி லங்கேஷ் படுகொலைக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தார். அந்த பதிவில், “எதிர்க்கருத்து கூறுவோரின் குரலை துப்பாக்கிக் கொண்டு வெல்ல நினைப்பது மோசமான வழியாகும். கவுரி லங்கேஷின் மறைவுக்கு துக்கம் அனுசரிப்பவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்”, என குறிப்பிட்டார்.