நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சூழல் நெருங்குவதை ஜனாதிபதியும், பிரதமரும் உணர்த்துகிறார்கள்.
நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதன் மூலமாக தேர்தல் ஆணையத்தின் வேலைப்பழு வெகுவாக குறையும். தேர்தல் நடைபெறும் காலகட்டங்களில் அந்தந்த பகுதிகளில் புதிய திட்டங்களை செயல்படுத்த தேர்தல் விதி அனுமதிப்பதில்லை. இதனால் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தினால், இதர காலங்களில் தேர்தல் ஆணையம் இதர சீர்திருத்த நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த முடியும். எனவே பெரும்பாலானோர் இதை வரவேற்கவே செய்கிறார்கள். இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டுக்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடரான நேற்று, லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். நாடாளுமன்றத்தில் அவரது முதல் உரை இது! இதில் குறிப்பாக 2 விஷயங்களை ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார். அவற்றில் ஒன்று, நாடாளுமன்ற லோக்சபாவுக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது! மற்றொன்று, முத்தலாக் தடை சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்பது!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த பேசிய இதே கருத்துகளை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வெளியே நிருபர்கள் கூட்டத்தில் வலியுறுத்திக் குறிப்பிட்டது முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, ஒரே நேரத்தில் தேர்தல் திட்டதை நிருபர்கள் கூட்டத்தில் அழுத்தம் கொடுத்து குறிப்பிட்டார் மோடி.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முத்தலாக் தடை சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து மோடி வலியுறுத்திப் பேசினார். இந்த சட்டத்திற்கான மசோதா, கடந்த மாதமே லோக்சபாவில் நிறைவேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. ராஜ்யசபாவில்தான் இந்த மசோதாவுக்கு நிஜமான சவால் காத்திருக்கிறது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் ஒரே குரலில் வலியுறுத்திப் பேசிய ஒரே நேரத்தில் தேர்தல், முத்தலாக் தடை சட்டம் ஆகிய இரண்டுக்கும் மத்திய அரசு வரும் நாட்களில் முக்கியத்துவம் கொடுக்கும் என தெரிகிறது.