ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: போலீஸ் அலட்சியம்

இந்தியாவில் ரயில் பயணம் என்பது பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பற்றதாக உள்ளது என்பதற்கான மற்றொரு சான்று மும்பையில் நடைபெற்றுள்ளது. ரயிலில் பயணிக்கும்போது சுய இன்பம் அனுபவித்த ஆண் குறித்து புகார் அளித்த பெண்ணிடம் “நீங்கள் வேறு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்”, என புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் ஒருவர் அலட்சியமாக நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து புகார் எழுப்பிய பெண் தன்னுடைய பிளாக்கில் குறிப்பிட்டதாவது, “கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதி ரயிலில் நான் கடந்து வந்த சம்பவம் அருவருக்கத்தக்கது. நானும் எனது தோழியும், ரயிலில் ‘சுய இன்பம்’ அனுபவித்துக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டோம். உடனேயே ரயில் பிளாட்ஃபார்ம் ஒன்றில் நின்றபோது அங்கிருந்த போலீஸ் ஒருவரிடம் அதுகுறித்த வீடியோவைக் காண்பித்து புகார் தெரிவித்தோம். ஆனால், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. அந்த சம்பவம் எந்த விதத்திலும் அவரை பாதிக்கவில்லை. மாறாக, நான் மறுபடியும் ரயிலில் ஏறும் வரை உடன் வருவதாக அலட்சியமாக சொன்னார். அதன்பின், நாங்கள் போலீசுடன் வருவதைக் கண்ட அந்த நபர் அங்கிருந்து வேறிடத்திற்கு சென்றார். ஆனால், அவரைப் பிடித்து விசாரிக்காமல் எங்களிடம், “அந்த நபர் இருக்கையை பதிவு செய்திருக்கலாம். அதனால் நீங்கள் வேறிடத்திற்கு சென்று அமர்ந்து கொள்ளுங்கள்”, என பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடைபெற்ற உடனேயே அப்பெண், அவர் எடுத்த வீடியோ பதிவை ட்விட்டரில் பதிவிட்டு இந்திய ரயில்வே துறையை டேக் செய்துள்ளார். ஆனால், அதுகுறித்து எவ்வித பதிலையும் இந்திய ரயில்வே அளிக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. அதன்பிறகு, கடந்த செவ்வாய் கிழமை தான் இந்த சம்பவத்தை வேறொரு நபர் ட்விட்டரில் பதிவிட்டு இந்திய ரயில்வே மற்றும் கோட்ட ரயில்வே மேலாளரையும் டேக் செய்தார். அதன் பிறகே இச்சம்பவம் குறித்து இந்திய ரயில்வே பதிலளித்ததாக தெரிகிறது.

ரயில் நிலையங்களில் வைஃபை வசதி, ஆன்லைன் டிக்கெட் புக்கிங், பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் என உள்ள இந்திய ரயில்வே மிகவும் புகழ்மிக்க ஒன்றாகும். ஆனால், ரயில்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதுகுறித்து ரயில்வே துறை அமைச்சகம் தனிக்கவனம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

×Close
×Close