இந்து திருமண சட்டத்தின்படி, தம்பதிகள் பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்பினால், ஆறு மாதங்கள் காத்திருக்க தேவையில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பொதுவாக, இந்து திருமண தம்பதிகள் விவாகரத்து பெற வேண்டும் என்று பரஸ்பரம் முடிவு செய்துக் கொண்டபின், நீதிமன்ற உத்தரவுப்படி ஓராண்டு பிரிவுக்கு பின் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யலாம்.
அதைத் தொடர்ந்து, ஆறு மாத காத்திருப்புக்கு பின், அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து அளிக்கும். விவாகரத்து செய்வதில் தம்பதியர் மனமாற்றம் அடைந்து, முடிவை மாற்றிக்கொண்டு இணைந்து வாழ இந்த கால கட்டம் உதவும் என கருதப்படுகிறது.
ஆனால் 8 ஆண்டு காலமாக பிரிந்து வாழ்கிற ஒரு தம்பதியரின் விவாகரத்து தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித் நேற்று மாறுபட்ட கருத்துடன் தீர்ப்பு அளித்துள்ளனர். அவர்களின் உத்தரவில், இந்து திருமண சட்டப்படி, பரஸ்பர விவாகரத்து கோரும் தம்பதி, ஓராண்டு பிரிவுக்கு பின், ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தலாம். திருமண உறவு எக்காரணத்தை முன்னிட்டும், சரி செய்ய முடியாமல், முறிந்து போகும் பட்சத்தில் கணவன், மனைவியை சேர்ந்திருக்க வேண்டும் என நிர்ப்பந்திப்பது முறையற்றது. அத்தகைய சூழ்நிலையில், விவாகரத்து வழங்குவதற்காக இந்து திருமண சட்டம் பிரிவு - 13பி உருவாக்கப்பட்டது. திருமண பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பதற்கான வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அவசரமாக அந்த திருமணத்தை ரத்து செய்யக்கூடாது என்ற நோக்கத்தில், ஆறு மாத காத்திருப்பு விதி அமல்படுத்தப்பட்டது.
இந்த காத்திருப்பு காலம், கணவன், மனைவி ஆகியோரின் மனக்கஷ்டங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இருக்கக் கூடாது. திரும்ப சேரும் வாய்ப்பே இல்லை எனும்போது, காத்திருப்பு காலம் தளர்த்தப்படலாம்.
காத்திருப்பு காலம், சம்பந்தப்பட்ட கணவன், மனைவியை மனதளவில் மேலும் துன்புறுத்தக்கூடும் என நீதிமன்றம் கருதினால், காத்திருப்பு காலத்தை தளர்த்தி, விவாகரத்து அளிக்கலாம். அவ்வாறு விவாகரத்து அளிக்கும்போது, ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலம் போன்றவற்றை ஆய்வு செய்து தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
பிரிந்து வாழ்கிற தம்பதியர், கருத்தொருமித்து பிரிந்து வாழ முடிவு எடுத்து விவாகரத்து மனு தாக்கல் செய்த பின்னர், இந்த 6 மாத கால காத்திருப்பு அவகாசத்தை ரத்து செய்து விடுமாறு கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.