தாயை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாக மகன் கைது: திடுக்கிடும் சிசிடிவி காட்சி

ராஜ்கோட்டில் கைது செய்யப்பட்டவர் தன் தாயை மாடிக்கு அழைத்துச் செல்லும் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், தாயை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாக மகனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் தன் தாயை மாடிக்கு அழைத்துச் செல்லும் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜ்கோட்டை சேர்ந்தவர் சந்தீப் நத்வானி, கல்லூரியொன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். அவருடைய தயார் ஜெயஸ்ரீ பென். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது அடுக்குமாடி குடியிருப்பின் கீழே இறந்துகிடந்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை போலீசார் சோதனை செய்தனர். அதில், சந்தீப் நத்வானி தன் தாய் ஜெயஸ்ரீ பென்னை கைதாங்கலாக மாடிக்கு அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதன்பின், சந்தீப் மட்டும் அவசர அவசரமாக வீட்டுக்குள் நுழைகிறார்.

இதையடுத்து, ஜெயஸ்ரீ பென்னை மாடிக்கு அழைத்துச் சென்று சந்தீப் நத்வானி கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் சந்தீப்பை நேற்று கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிட்டத்தட்ட 4 மாதம் கழித்து முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜெயஸ்ரீ பென்னுக்கு மூளை கோளாறு உள்ளதால் அவரால் நடக்கவும் முடியாத நிலைமை இருந்துள்ளது. இதனால், குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில், ஜெயஸ்ரீ பென் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close