நாம் வறுமையில் துவண்டாலும் மற்றவர்களின் பொருட்களை நாம் சொந்தமாக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்கு குஜராத்தை சேர்ந்த வாட்ச்மேன் ஒருவரின் 15 வயது மகன் சிறந்த சான்றாகியிருக்கிறான். விளையாடும்போது தற்செயலாக கிடைத்த 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரத்தை உரியவரிடம் ஒப்படைத்திருக்கிறான் அச்சிறுவன். அச்சிறுவனின் உயர்ந்த எண்ணத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா?
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் விஷால் உபத்யாய். இவனது தந்தை வாட்ச்மேனாக பணிபுரிகிறார். அவருக்கு மாதம் 8,000 ரூபாய் சம்பளம். அவனது தாய் துணிகள் தைக்கும் வேலை செய்கிறார். விஷால் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 15-ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று அச்சிறுவன் டைமண்ட் சாலையில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, பந்து ஒன்றை தேடுவதற்காக பார்க்கிங் பகுதிக்கு சென்றான். அங்கே உள்ள இருசக்கர வாகனத்தின் கீழ் ஒரு பை கிடைத்தது. அதில் முழுக்க வைரங்கள் இருந்தன.
“நான் அந்த வைரம் குறித்து என் பெற்றோரிடம் சொல்லாமல் வீட்டில் வைத்திருந்தேன். அதன் உரிமையாளரை கண்டறிந்து ஒப்படைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அன்றிலிருந்து மூன்றாம் நாள் ஒருவர் எங்கள் வீட்டருகே வந்து வைரத்தை தேடி விசாரித்துக் கொண்டிருந்தார். நான் அவரை பின்தொடர்ந்து அவரிடம் என்னிடம் தான் வைரம் இருக்கிறது என்று கூறினேன்.”, என சிறுவன் விஷால் கூறினான்.
அதிலிருந்த வைரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 40 லட்ச ரூபாய். வைரத்தின் உரிமையாளரான மன்சுக் சவாலியா அச்சிறுவனுக்கு 30,000 ரூபாய் பணம் கொடுத்து அவனது நற்பன்பை பாராட்டினார். மேலும்ம் சூரத் வைர வியாபாரிகள் சங்கம் அச்சிறுவனுக்கு 11,000 பணத்தொகையை பரிசாக அளித்தது.
”நான் அச்சிறுவனுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு அந்த வைரங்கள் கிடைக்காமல் இருந்தால் எனக்கு அது மிகப்பெரும் இழப்பு. இதனால், ஏற்படும் இழப்பை ஈடு செய்ய என் வீட்டையே விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். என்னையும், என் குடும்பத்தையும் அந்த சிறுவன் காப்பாற்றிவிட்டான்.”, என மன்சும் சவாலியா கூறினார்.
தனக்கு பரிசாக கிடைத்த பணத்தை கல்விக்காக செலவு செய்ய சிறுவன் விஷால் திட்டமிட்டுள்ளான்.
சிறுவனின் இந்த நற்பண்பை நாமும் பாராட்டுவோமே.