காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலப் பாதிப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, கடந்த ஓரிரு ஆண்டுகளாக உடல் நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறார். தேர்தல் பிரசாரங்களிலும்கூட அவர் அதிகம் பங்கேற்கவில்லை.
சோனியாவுக்கு பதிலாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியே பெரும்பாலான பிரசாரக் கூட்டங்களுக்கு செல்கிறார். விரைவில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் ராகுலை அமர்த்தவும் சோனியா தயாராகி வருகிறார்.
வெளி நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த சோனியா, கடைசியாக அண்மையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் இன்று (27-ம் தேதி) அவருக்கு திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வார இறுதி விடுமுறையை கழிக்க அவர் சிம்லாவுக்கு சென்றதாகவும், ஆனால் உடல்நலப் பாதிப்பு காரணமாக உடனே திரும்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சோனியா வயிற்றுப்போக்கு காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை முடிந்து விரைவில் சோனியா வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.