தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஜிசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய ஜிசாட்-9 செயற்கைக்கோள், இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி-எஃப்09 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதிஷ் தாவான் விண்வெளி மையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 4.57 மணிக்கு ஜிஎஸ்எல்வி-எஃப்09 ராக்கெட்டானது, ஜிசாட்-9 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது. 235-கோடி மதிப்பில் உருவான இந்த செயற்கைக்கோளுக்கு, இந்தியா முழு நிதி வழங்கியுள்ளது.
220 கிலோ எடை கொண்ட இந்த ஜிசாட்-9 செயற்கைகோளானது 3 வருடங்களில் உருவாக்கப்பட்டது. ஜிசாட்-9 செயற்கைகோள் விண்ணில் 12 வருடங்களுக்கும் மேல் செயல்பட்டு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது. தெற்காசிய நாடுகளில் பேராபத்துகள் குறித்த தகவலை முன்கூட்டியே அளிக்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானை தவிர்த்து 6 நாடுகளில் தகவல் தொடர்புக்கும் உதவும் வகையிலும் செயல்படும். தகவல்தொடர்பு தொழில்நுட்பம், பேரிடர் கால மேலாண்மை, கல்வி மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுடனான தொடர்புகளை வளர்த்துக்கொள்ளவது தான் இந்த செயற்கைகோளுக்கான முக்கிய நோக்கம்.
இந்நிலையில், பிரதமர் மோடி தெரிவித்ததாவது: செயற்கோளை உருவாக்கி விண்ணில் செலுத்துவதற்காக கடின உழைப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று தெரிவித்தார். சார்க் நாடுகளான, வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், நேபாளம், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் வாழ்த்து தெரிவித்துள்ளன.