பாஜக துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கைய்யா நாயுடு கடந்து வந்த பாதை!

2004-ல் பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவி காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கட்சி சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக மூத்த தலைவர் வெங்கைய்யா நாயுடு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டு வேட்பாளர்களும் தங்களின் வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே வெங்கைய்யா நாயுடுவை தமிழகத்தின் உற்ற நண்பர் என்று பாராட்டியிருக்கிறார்.

வெங்கைய்யா நாயுடு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1949-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தவர். B.A., B.L. படித்துள்ள இவர், கல்லூரி மாணவராக இருந்தபோதே பாரதிய ஜனதாவின் இளைஞர் அமைப்பான A.B.V.P.-ல் உறுப்பினராக இருந்தார். இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, அதனை எதிர்த்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1977-80-ல் ஆந்திர மாநில ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்தார். 1980-83-ஆம் ஆண்டுவரை அகில இந்திய பா.ஜ.க இளைஞர் அணி பிரிவு துணைத்தலைவராக பணியாற்றியிருக்கிறார். 1978-ம் ஆண்டு, முதல்முறையாக ஆந்திர சட்டப்பேரவைக்கு உதயகிரி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1985-ம் ஆண்டுவரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். 1980-85-ஆம் ஆண்டுகளில் ஆந்திர மாநில பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவராக இருந்தார்.

1980 முதல் 1985-ஆம் ஆண்டுவரை ஆந்திர மாநில பா.ஜ.க தலைவராகவும், 1985 முதல் 1988-ஆம் ஆண்டுவரை ஆந்திர பா.ஜ.க பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். பின் 1993-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் பதவியில் இருந்துள்ளார். 1998 முதல் மூன்றுமுறை கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2000 முதல் 2002-ஆம் ஆண்டுவரை வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அதன்பின், 2002 முதல் 2004 வரை பா.ஜ.கவின் தேசிய தலைவர் பதவியை வகித்தார். 2004-ல் பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். பின் 2014-ம் ஆண்டு முதல் இதுவரை மத்திய நகர்ப்புற மேம்பாடு, ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராகவும் தகவல்-ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். 2016-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது, பா.ஜ.க. கூட்டணியின் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

×Close
×Close