நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி நவம்பர் 7-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார்.
கடந்த 2004-2009 மற்றும் 2009-2014 ஆகிய ஆண்டுகளில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு ஆட்சி புரிந்தது. அப்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக, உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் மீதும், 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இதுதொடர்பாக, கடந்த ஆறு ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள், சிபிஐ, அமலாக்கப் பிரிவு தரப்பு ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஷைனி உத்தரவிட்டார்.
இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி ஆகஸ்டு 25-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஷைனி தெரிவித்தார். ஆனால், அன்று அறிவிக்கப்படாத நிலையில்,, வழக்கின் தீர்ப்பு தேதி செப்டம்பர் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஷைனி கூறியிருந்தார். ஆனால், வழக்கின் விவரங்கள் ஏராளமாக இருப்பதால், தீர்ப்பு எழுதும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த நீதிபதி ஷைனி, தீர்ப்பு தேதி அக்டோபர் 25-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும், அன்றைய நாளிலிருந்து இரண்டு நாட்களில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனால், தீர்ப்பு தேதி இன்று (புதன் கிழமை) வெளியாகும் என நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவம்பர் 7-ம் தேதிதான் தீர்ப்பு தேதி வெளியாகும் என நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்தார்.
தீர்ப்பு தேதியை அறிவிப்பது மூன்றாவது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.