காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவின் பாதுகாவலர் ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மிக, மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு உள்ள அச்சுறுத்தலின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றவர்கள். இந்த பாதுகாப்பில், தேசிய பாதுகாப்பு படையில் பயிற்சி பெற்ற வீரர்கள், குண்டு துளைக்காத கார் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும்.
அதேபோல், பிரதமர், முன்னாள் பிரதமர், அவர்களது நேரடி குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) உயரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு இந்த உயர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கு வழங்கப்படும் சிறப்பு பாதுகாப்புப் படையில் (எஸ்பிஜி) இடம்பெற்றிருந்த வீரர் ராகேஷ் குமார் என்பவர் மாயமாகியுள்ளார். இவர், சோனியாவின் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர்.
டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியிருக்கும் இவர், கடந்த 1-ம் தேதி பணிக்கு வந்துள்ளார். அன்றைய தினம் சக பணியாளர்களை சந்தித்த அவர், தனது துப்பாக்கி மற்றும் செல்போனை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார். தனது மகன் வீட்டுக்கு வராததால் நண்பரது வீட்டிற்கு அவர் சென்றிருப்பார் என அவரது தந்தை நினைத்துள்ளார். ஆனால், மறுநாளும் வராத காரணத்தால், அதிர்ச்சியடைந்த அவரது தந்தை மூத்த அதிகாரிகளிடம் கடந்த 3-ம் தேதி புகார் அளித்துள்ளார். அதிகாரப்பூர்வமாக அன்று வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான வீரர் ராகேஷ் குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சோனியாவின் பாதுகாப்பு குறித்த விஷயம் என்பதால் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை ஒரு துப்பும் துலங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.